கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட இருக்கும் இந்திய மாணவர்: சோகப் பின்னணி!

Report Print Balamanuvelan in கனடா

ஒரு வெளிநாட்டு மாணவராக கல்வி பயில கனடா சென்ற ஒரு மாணவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட இருக்கிறார், அவர் செய்த குற்றம் கடுமையாக உழைத்தது!

பஞ்சாபை சேர்ந்த Jobandeep Sandhu, கல்வி பயில்வதற்காக கனடா சென்றிருந்தார். அவர் கல்லூரியில் பயிலும்போதே ஒரு ட்ரக் ஓட்டுநராகவும் பணிபுரிந்தார்.

கடினமாக உழைத்ததற்காக கைது செய்யப்பட்டுள்ள Sandhu, நாடு கடத்தப்படலாம் என அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ஆம் திகதி ட்ரக் ஓட்டிக்கொண்டிருக்கும்போது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிசார் அவரை நிறுத்தி விசாரித்தனர்.

சில மாதங்களுக்கு பிறகு Sandhu கைது செய்யப்பட்டு கைவிலங்கிடப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார்.

பொலிஸ் விசாரணையில் அவர் மீது எந்த குற்றப்பின்னணியும் இல்லை என்பது தெரியவந்தது.

அப்படியானால், அவர் செய்த குற்றம்?

சோதனையிடப்பட்ட அன்று ஒரு வெளிநாட்டு அல்லது சர்வதேச மாணவருக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தைவிட அதிக நேரம் அவர் வேலை செய்ததுதான் Sandhu செய்த குற்றம்.

ஆனால் முழு நேரம் வேலை செய்தால் மட்டுமே தன்னால் தனது கல்விக்கட்டணத்தை செலுத்தமுடியும் என்கிறார் Sandhu.

நான் பொய் சொல்லவில்லை, கொலை செய்யவில்லை, கொள்ளையடிக்கவில்லை என்று கூறும் Sandhu, நான் செய்த ஒரே குற்றம் வேலை செய்ததுதான் என்கிறார்.

தற்போதைய விதிகளின்படி, வெளிநாட்டு மாணவர்கள் வாரம் ஒன்றிற்கு 20 மணி நேரம் மட்டுமே கல்லூரி வளாகத்திற்கு வெளியே வேலை செய்யலாம்.

கோடை விடுமுறை போன்ற நேரங்களில் மட்டுமே வெளிநாட்டு மணவர்களுக்கு முழுநேரம் வேலை செய்ய அனுமதி.

ஆனால் சுமார் 27,000 டொலர்கள் கல்விக்கட்டணம் மற்றும் வாழ்வதற்கான செலவு ஆகியவற்றை சமாளிக்க வேண்டுமானால் முழு நேரம் வேலை செய்தால் மட்டுமே முடியும் என்கிறார் Sandhu.

ஆனால் கல்வி பயில்வதற்காக உரிமம் பெற்று கனடாவுக்கு வந்துள்ளவர்களின் முக்கிய பணி கல்வி பயில்வதாகத்தான் இருக்க வேண்டும் என்று கனடா அரசு கூறுகிறது.

Sandhu, படிப்பை முடித்துவிட்டு தற்போது வேலையாட்கள் தேவை அதிகம் உள்ள துறை ஒன்றில் ஒண்டாரியோவில் முழு நேர வேலையில் இருப்பதால் தன்னை கனடாவிலேயே வாழ அனுமதிக்க வேண்டும் என்று கோருகிறார்.

Sandhu தற்காலிக வாழிட உரிமம் கோரி IRCCக்கு விண்ணப்பித்துள்ளார்.

அது ஏற்றுக் கொள்ளப்பட்டால் அவர் கனடாவில் வாழ அனுமதிக்கப்படலாம், இல்லையென்றால் மே மாதம் 31ஆம் திகதிக்குமுன் அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என கனடா எல்லை பாதுகாப்பு ஏஜன்சி தெரிவித்துள்ளதாக Sandhu தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்