176 பயணிகள் கொல்லப்பட்ட விவகாரம்... கருப்பு பெட்டியை கொடுக்க மறுக்கும் ஈரான்: விசாரணை கோரும் ட்ரூடோ

Report Print Vijay Amburore in கனடா

176 பயணிகளுடன் உக்ரேனிய விமானம் விபத்தில் சிக்கிய விவாகரத்தில் ஈரான் கருப்பு பெட்டிகளை வெளியிட மறுத்துள்ளது.

ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து புதன்கிழமை காலை 176 பயணிகளுடன் புறப்பட்ட உக்ரேனிய பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது.

அமெரிக்க ட்ரோன் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஈராக்கில் உள்ள இராணுவ தளங்களை நோக்கி ஈரான் பல ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்திய மூன்று மணி நேரங்களுக்கு பின்னர் இந்த விபத்து நிகழ்ந்தது.

இரண்டு நிகழ்வுகளும் இணைக்கப்படுவதற்கான அறிகுறிகள் இல்லை என்றும், விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானதாகக் சில ஈரானிய அதிகாரிகள் குற்றம் சாட்டினர். ஆனால் பேரழிவிற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை.

இறந்தவர்களில் 82 பேர் ஈரானியர்கள் மற்றும் 68 பேர் கனேடிய குடிமக்கள் என்று உக்ரைனின் வெளியுறவு மந்திரி வாடிம் பிரிஸ்டாய்கோ தெரிவித்தார்.

பதினொரு உக்ரேனியர்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒன்பது பேர் விமானத்தின் குழு உறுப்பினர்கள் என்று அவர் கூறினார்.

மேலும் 10 பயணிகள் சுவீடனையும், நான்கு பேர் ஆப்கானிஸ்தானையும், மூன்று ஜேர்மனி மற்றும் மூன்று பேர் பிரித்தானியாவையும் சேர்ந்தவர்கள் என்று அமைச்சர் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், இந்த விபத்தில் கொல்லப்பட்ட ஈரானியர்களின் எண்ணிக்கை 140 ஆக இருந்தது என்று தெஹ்ரானின் ஆளுநர் அலுவலகத்தின் அதிகாரி மன்சூர் தாராஜதி ஈரானிய அரசு ஊடகங்களுக்கு தெரிவித்தார். பலியானவர்களில் பலர் இரட்டை பாஸ்போர்ட்டுகளை வைத்திருக்கலாம் என்றும் அவர் கூறியிருந்தார்.

விமான நிறுவனத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறைந்தது 25 குழந்தைகள் இருந்ததாகக் கூறப்பட்டது. அதில் 10 வயதிற்குட்பட்ட பலர் இருந்தனர் என தெரிவிக்கப்பட்டது.

விமானத்தின் கருப்பு பெட்டிகள் மீட்கப்பட்டுள்ளன, ஆனால் தெஹ்ரானில் உள்ள சிவில் விமானப் போக்குவரத்துத் தலைவர் அலி அபெட்ஸாதே அவற்றை போயிங்கில் ஒப்படைக்க மறுத்துவிட்டார்.

இந்த நிலையில் விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பங்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்த கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, "இந்த விபத்து முழுமையாக விசாரிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக எங்கள் அரசாங்கம் அதன் சர்வதேச நட்பு நாடுகளுடன் தொடர்ந்து இணைந்து செயல்படும். மேலும் கனேடியர்களின் கேள்விகளுக்கு விடை காணப்படும்" என தெரிவித்தார்.

மேலும், கனேடிய அரசாங்கம் உக்ரைன் அரசாங்கத்துடன் தொடர்பில் இருப்பதாகவும், தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் சர்வதேச சகாக்ககளுடன் பேசி வருவதாகவும் கூறினார்.

முன்னதாக கனடா 2012 ல் ஈரானுடனான உறவுகளை முறித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்