ஓய்வு பெற்ற ஜேர்மனியின் மற்றொரு பிரபல கால்பந்து வீரர்: அதிர்ச்சியில் ரசிகர்கள்

Report Print Kabilan in கால்பந்து

ஜேர்மனி கால்பந்து அணியின் மூத்த வீரரான மரியோ கோமெஸ், சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ரஷ்யாவில் நடந்த உலகக்கிண்ண கால்பந்து தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜேர்மனி அணி, லீக் சுற்றுடன் வெளியேறியது கடும் விமர்சனங்களை எழுப்பியது.

அதனைத் தொடர்ந்து, அந்த அணியின் முன்னணி வீரரான மெசூட் ஒசில் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டதால், அவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

இந்நிலையில், ஜேர்மனி அணியின் மற்றொரு மூத்த கால்பந்து வீரரான மரியோ கோமெஸும், சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

இவர் கடந்த 2014ஆம் ஆண்டு பிரேசிலில் நடந்த உலகக் கிண்ண தொடரில், ஜேர்மனி அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல முக்கிய காரணமாக விளங்கியவர்.

தனது ஓய்வு குறித்து கோமெஸ் கூறுகையில், ‘தற்போது நான் ஓய்வு முடிவை அறிவிக்கும் நேரமாகும். இது திறமையுள்ள ஏராளமான இளைஞர்களுக்கு, அவர்களுடைய கனவை நனவாக்க வாய்ப்பாக அமையும்’ என தெரிவித்துள்ளார்.

ஜேர்மனி அணிக்காக 2007ஆம் ஆண்டில் இருந்து விளையாடி வரும் 33 வயதாகும் கோமெஸ், இதுவரை 78 சர்வதேச போட்டிகளில் 31 கோல்கள் அடித்துள்ளார்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்