தாயாரின் சடலத்தை பாதாள அறையில் 2 ஆண்டுகள் பாதுகாத்த நபர்: விசாரணையில் அம்பலமான காரணம்

Report Print Arbin Arbin in ஜேர்மனி

ஜேர்மனியில் நபர் ஒருவர் மரணமடைந்த தாயாரின் சடலத்தை குடியிருப்பின் பாதாள அறையில் 2 ஆண்டுகளாக பாதுகாத்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக மரணமடைந்த தாயாரின் பெயரில் முதியோர் ஓய்வூதியமும் கைப்பற்றியுள்ளது அம்பலமாகியுள்ளது.

பெர்லினில் குடியிருக்கும் 57 வயதான Uwe M என்பவரே மரணமடைந்த தாயாரின் பெயரில் மோசடியாக ஓய்வூதியம் பெற்று வந்தவர்.

வேலையற்ற யுவெ தமது தாயாருடன் பெர்லினில் வாடகை குடியிருப்பு ஒன்றில் குடியிருந்து வந்துள்ளார். அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் யுவெ எந்த நெருக்கமும் காட்டியதும் இல்லை.

இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் தாயார் கெர்டா அன்னா மேரி(85) வயது மூப்பு காரணமாக இறந்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி காரணமாக தாயாரின் மரணம் தொடர்பில் வெளியே எவருக்கும் தெரிவிக்காமல், அரசு அதிகாரிகளிடமும் தெரிவிக்காமல் ஓய்வூதிய பணத்தை கைப்பற்ற அவர் முடிவு செய்துள்ளார்.

இதனையடுத்து சடலத்தை பாதாள அறையில் ஒரு பெட்டிக்குள் வைத்து பாதுகாத்துள்ளார். துர்நாற்றம் வெளியே தெரியாமல் இருக்க ரசாயன பொருட்களையும் அதில் நிரப்பியுள்ளார்.

அக்கம்பக்கத்தினர் தாயார் தொடர்பில் கேள்வி எழுப்பினால், ஸ்பெயின் நாட்டில் உள்ள முதியோர் இல்லத்தில் உள்ளதாக பொய் கூறி வந்துள்ளார்.

மேலும், மாதந்தோறும் தாயாருக்கு கிடைத்து வந்த ஓய்வூதியம் 1470 யூரோ தொகையை இவர் கைப்பற்றி வந்துள்ளார்.

இவருக்கு வேலை இல்லை என்பதால் அரசு அளித்து வந்த 950 யூரோ தொகையையும் கைப்பற்றியுள்ளார்.

இதனிடையே இவரது நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட அப்பகுதி மக்கள் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

பொலிசார் மேற்கொண்ட விசாரணை மற்றும் சோதனையில் யுவெ நடத்திய நாடகம் அம்பலமானது.

யுவெ மேற்கொண்ட இந்த செயலுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்