30 லட்சம் பணம் கொடுங்க... உடலை வீட்டிற்கு அனுப்பி வைக்கிறோம்: பகீர் கிளப்பிய இளம்பெண் கடத்தல் விவகாரம்

Report Print Arbin Arbin in இந்தியா

தமிழகத்தின் கும்பகோணம் அருகே கல்லுாரி மாணவி கடத்தப்பட்ட விவகாரத்தில் உடலை அனுப்பி வைக்க 30 லட்சம் பணம் கேட்டு வந்த குறுஞ்செய்தியால் தாயார் அதிர்ச்சியடைந்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் 18 வயதான சுபஸ்ரீப்ரியா. இவர் கும்பகோணம் அரசு மகளிர் கல்லுாரியில் பி.எஸ்.சி. முதலாமாண்டு படித்து வருகிறார்.

நேற்று கல்லுாரிக்கு செல்வதற்காக சென்ற சுபஸ்ரீப்ரியா, இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது.

அதிர்ச்சியடைந்த அவரது தாயார் சித்ரா, மகளின் செல்போனிற்கு பலமுறை முயற்சி செய்தும் சுபஸ்ரீப்ரியா போனை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், இரவு 11 மணியளவில் மாயமான சுபஸ்ரீப்ரியா மொபைலில் இருந்து அவரது உறவு பெண் ஒருவருக்கு வாட்ஸ் அப்பில் தகவல் ஒன்று வந்துள்ளது.

அதில் சுபஸ்ரீப்ரியாவை கடத்தியுள்ளதாகவும், அவரது இதயம் தேவைப்படுகிறது எனவும். அத்துடன் `வீட்டின் முகவரியை அளித்தால், உடலை வீட்டிற்கு அனுப்பி வைக்கிறோம் எனவும் கூறப்பட்டிருந்தது.

அதற்கு 30 லட்சம் பணம் தர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து உறவுப் பெண், சுபஸ்ரீப் பிரியாவின் தயார் சித்ராவிடம் அந்த தகவல் குறித்து கூறியிருக்கிறார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சித்ரா, தனது மகளைக் காணவில்லை என பந்தநல்லுார் பகுதி பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், கும்பகோணம் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கமெரா பதிவுகளை கண்காணித்தும் வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers