'கமல்' பட பாணியில் நடந்த மர்ம கொலை... 35 நாட்களுக்கு பின் அம்பலமான உண்மை!

Report Print Vijay Amburore in இந்தியா

'பாபநாசம்' பட பாணியில் கொலை செய்து, பாதிக்கப்பட்டவரின் உடல், பைக் ஆகியவற்றை 10 அடி ஆழத்தில் புதைத்து வைத்திருந்த மூன்று பேரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பங்கஜ் திலீப் கிராம்கர் (32) என்பவர் ஹல்திராம் நிறுவனத்தில் எலக்ட்ரீஷியனாக பணிபுரிந்து வந்தார்.

கடந்த டிசம்பர் மாதம் 28ம் திகதி அன்று தனது இருசக்கர வாகனத்தில் வீட்டை விட்டு வெளியேறிய பங்கஜ், அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனையடுத்து பல இடங்களில் தேடிப்பார்த்த அவருடைய மனைவி இறுதியாக பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் தீவிர விசாரணை மேற்கொண்ட வந்த பொலிஸார், நேற்று சாலையோரத்தில் உணவுக்கடை வைத்திருக்கும் அமர்சிங் என்ற லல்லு ஜோகேந்திரசிங் தாக்கூர் (24), மற்றும் அவரது சமையல்காரர் மனோஜ் என்ற முன்னா ராம்பிரவேஷ் திவாரி (37) மற்றும் மற்றொரு கூட்டாளியான சுபம் என்ற துஷார் ராகேஷ் டோங்ரே (28) ஆகியோரை கைது செய்தனர்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக பேசிய பொலிஸார், பங்கஜின் மனைவியுடன் அமர்சிங்கிற்கு தகாத உறவு இருந்து வந்துள்ளது. இதனால் மனமுடைந்த பங்கஜ் தனது குடும்பத்துடன் அங்கிருந்து வெளியேறி வேறு இடத்தில் குடியேறியுள்ளனர். மேலும், அமர்சிங்கின் கடைக்கு சென்று தனது மனைவியுடன் இருக்கும் தகாத உறவை முறித்துக்கொள்ளுமாறு கூறியுள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், அமர்சிங் இரும்பு கம்பியால் பங்கஜ் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் அவர் உயிரிழந்ததை அடுத்து, தனது கடையில் வேலை செய்த இருவரின் உதவியுடன் உடலை இரும்பு டிரம்மில் வைத்து, குற்றத்தின் ஆதாரங்களை அழிக்க சதித்திட்டம் தீட்டியுள்ளார்.

உள்ளூரை சேர்ந்த ஒருவரை அழைத்து கடைக்கு பின்னால் 10 அடி ஆழ குழி தோண்டுமாறு கூறியுள்ளார். பின்னர் அந்த குழியில் பங்கஜின் உடல் மற்றும் அவருடைய இருசக்கர வாகனத்தை புதைத்து, விரைவில் மக்க வேண்டும் என்பதற்காக 50கிலோ உப்பை கொட்டி மூடியுள்ளார்.

மேலும் அவருடைய செல்போனை ராஜஸ்தான் செல்லும் ஒரு லொறியில் வீசியெறிந்துள்ளார்.

இதற்கிடையில் பங்கஜ் மனைவி கொடுத்த புகாரின் பேரில், விசாரணையை ஆரம்பித்த பொலிஸார் மாறுவேடத்தில் பலமுறை அமர்சிங் கடைக்கு சென்று ஆதாரங்களை சேகரித்து வந்தனர்.

இந்த நிலையில் அவர்கள் மூன்று பேரும் கொலை செய்திருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நேற்று கடையை சுற்றிவளைத்து கைது செய்ததாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்