ஆந்திராவில் பயங்கரம்..! கொரோனா பராமரிப்பு மையமாக செயல்பட்ட ஹோட்டலில் பயங்கர தீ விபத்து.. 9 பரிதாப பலி

Report Print Basu in இந்தியா

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் கொரோனா பராமரிப்பு மையமாக செயல்பட்டு வந்த ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டதில் 9 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

விஜயவாடா நகரில் உள்ள ஸ்வர்ணா பேலஸ் ஹோட்டலிலே அதிகாலை 5 மணிக்கு இந்த தீ விபத்து நிகழ்ந்தது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்காலம் எனவும் கூறப்படுகிறது.

ஆந்திராவில் உள்ள பிரபலமான ரமேஷ் தனியார் மருத்துவமனை, ஹோட்டலில் 3வது, 4வது மற்றும் 5வது மாடிகளை கொரோனா நோயாளிகளுக்கான பராமரிப்பு மையமாக பயன்படுத்து வந்துள்ளது.

விபத்தின் போது 30 கொரோனா நோயாளிகள் மற்றும் 10 மருத்துவ ஊழியர்கள் பராமரிப்பு மையத்தில் இருந்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

தற்போது வரை 9 பேர் சடலமாகவும் மற்றும் 17 நோயாளிகள் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டதாக விஜயவாடா நகர பொலிஸ் ஆணையர் தெரிவித்துள்ளார்.

9 பேரும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மீட்கப்பட்ட நோயாளிகள் அருகிலுள்ள மற்றொரு ஹோட்டலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தீ விபத்தின் போது ஹோட்டலின் கடைசி மாடியில் சிக்கியிருந்த நோயாளிகள் உதவி கேட்டு கதறி அழுததாகவும் மற்றும் சிலர் அங்கிருந்து குதிக்க முயன்றதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.

விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள ஆந்திர முதல்வர் ஜகன் மோகன் ரெட்டி, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 50 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை குஜராத் அகமதாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இடம்பெற்ற தீ விபத்தில் 8 கொரோனா நோயாளிகள் பலியாகினர் என்பது நினைவுக்கூரத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்