பாகிஸ்தான் மருத்துவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும்..! சவுதி அதிரடி உத்தரவு

Report Print Kabilan in மத்திய கிழக்கு நாடுகள்

சவுதி அரேபிய அரசு அங்கு பணியாற்றும் பாகிஸ்தான் மருத்துவர்களை உடனடியாக வெளியேற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் M.S மற்றும் M.D போன்ற முதுகலை மருத்துவப்படிப்பின் தரம், பயிற்சி ஆகியவை சிறப்பாக இல்லை என சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, சவுதியில் பணியாற்றும் பாகிஸ்தான் மருத்துவர்களின் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக, அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இதுதொடர்பாக சவுதி அரேபிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பாகிஸ்தானின் முதுகலை மருத்துவ மேற்படிப்பு, சவுதி அரசின் சுகாதார ஆணையத்தின் நெறிமுறைகளுக்கு ஏற்புடையதாக இல்லை என்பதால், அங்கு M.S, M.D படித்துவிட்டு சவுதியில் பணியாற்றுபவர்களின் ஒப்பந்தத்தை ரத்து செய்கிறோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பாகிஸ்தான் மருத்துவர்களை உடனடியாக வெளியேறும்படியும் சவுதி அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், பாகிஸ்தான் மருத்துவர்களுக்கு பணி நீக்கம் செய்யப்பட்டதற்கான கடிதங்களை, சுகாதார சிறப்புகளுக்கான ஆணையம் அனுப்பி உள்ளது.

அதில், தொழில்முறை தகுதிக்கான உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்றும், S.C.F.H.S விதிமுறைகளின்படி பாகிஸ்தானில் இருந்து பெறப்பட்ட உங்களின் முதுகலை பட்டம் ஏற்றுக்கொள்ளப் படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் ஆகிய அரபு நாடுகளும் பாகிஸ்தானில் முதுகலை மருத்துவப்படிப்பு படித்தவர்களை பணியில் இருந்து நீக்கி, உடனடியாக அவர்களை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளன.

சவுதியின் இந்த முடிவால் பாகிஸ்தானில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் வேலையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவின் இந்த குற்றச்சாட்டு குறித்து பாகிஸ்தான் எந்தவித கருத்து தெரிவிக்கவில்லை. அத்துடன், பாகிஸ்தானில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் பேராசிரியர்கள் சவுதி அரேபியாவின் குற்றச்சாட்டை தீர்க்கமாக நிராகரித்துள்ளனர்.

மேலும், கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் பாகிஸ்தானின் வர்த்தகம் உள்ளிட்ட துறைகளும் பெரும் பின்னடைவை சந்தித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்