ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட ரஷ்ய பேராசிரியரின் பையில் துண்டிக்கப்பட்ட இளம்பெண்ணின் கைகள்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மாநில பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒலெக் சோகோலோவை கொலை குற்றத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மாவீரன் நெப்போலியன் போர் பற்றிய முன்னணி ரஷ்ய நிபுணரும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மாநில பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான ஒலெக் சோகோலோவ் நவம்பர் 9 அன்று அதிகாலை மொய்கா ஆற்றில் இருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டார்.

அப்போது அவர் வைத்திருந்த பையில் இளம்பெண்ணின் இரண்டு கைகள் மற்றும் ஒரு துப்பாக்கி இருப்பதை பார்த்து பொலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக அவரை கைது செய்து, அவர் தங்கியிருந்த அறையில் சோதனை மேற்கொண்டனர்.

அங்கு ஒரு பெண்ணின் தலையும், உடலும் தனித்தனியாக கிடந்துள்ளது. அதனை கைப்பற்றிய பொலிஸார், ஆரம்பத்தில் பேராசிரியரின் உறவினராக இருக்கலாம் என்கிற கோணத்தில் விசாரணையை ஆரம்பித்தனர்.

ஆனால் தற்போது அந்த உடல் பேராசிரியரின் மாணவி அனஸ்தேசியா யெஷென்கோ (24) என பொலிஸ் வட்டாரங்களால் அடையாளம் காணப்பட்டதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

63 வயதான விரிவுரையாளருடன் அவர் உறவில் இருந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் அவர்களது வீட்டில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின் போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது ஆத்திரமடைந்த பேராசிரியர், தற்செயலாக மாணவியை கொலை செய்துவிட்டு, வந்திருந்த உறவினர்களுக்கு தெரியாமல் சடலத்தை மட்டும் மறைத்து வைத்திருந்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதன்பிறகு வெட்டி எடுத்த கைகளை ஆற்றில் வீச முயற்சித்திருக்க வேண்டும். அல்லது தற்கொலை செய்துகொள்வதற்காக ஆற்றில் குதித்த போது பொதுமக்கள் பார்த்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

ரஷ்ய ராணுவ வரலாற்றில் முன்னணி நிபுணரான சோகோலோவ் தாழ்வெப்பநிலை நோயால் பாதிக்கப்பட்டு இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சோகோலோவ் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மாநில பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். மேலும் நெப்போலியன் வரலாற்றின் தருணங்களை மறுபரிசீலனை செய்வதில் நன்கு அறியப்பட்டவர். அவர் ரஷ்ய இராணுவ வரலாற்று சங்கத்தின் தலைவராக இருந்தார்.

இப்போது உடலியல் அறிவியல் குழுவில் உறுப்பினராக உள்ளார். அவர் நெப்போலியன் சகாப்தத்தை சித்தரிக்கும் திரைப்படங்களில் ஐரோப்பிய தொலைக்காட்சி ஒளிபரப்பாளர்களின் தொழில்நுட்ப ஆலோசகராக பணியாற்றியுள்ளார். மேலும் அவர் 2003 இல் பிரான்சில் 'லெஜியன் ஆப் ஹானரின் நைட்' என்கிற கௌரவ விருதும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்