ஆங்கிலத்தில் பேசியதால் திமுக எம்.எல்.ஏ-வை விமர்சித்த கருணாஸ்: ஸ்டாலின் கடும் எதிர்ப்பு

Report Print Jubilee Jubilee in அரசியல்

சட்டசபையில் திமுக உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் ஆங்கிலத்தில் பேசியதை நடிகரும் அதிமுக ஆதரவு உறுப்பினருமான கருணாஸ் எம்.எல்.ஏ விமர்சித்ததால் சபையில் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் நிலவியது.

சட்டசபையில் திருத்தப்பட்ட நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய கருணாஸ், தமிழ் வளர்த்த மதுரை தொகுதியைச் சேர்ந்தவர் தனக்கு தமிழ் தெரியாது. நான் ஆங்கிலத்தில் பேசுகிறேன் என கூறி ஆங்கிலத்திலேயே பேசினார்.

அவர் ஆங்கிலத்தில் பேசியதால் அமைச்சர்களின் குறுக்கீடு இல்லாமல் இருந்தது என்று கூறினார்.

கருணாஸின் இந்த பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பேரவையில் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் நிலவியது.

இதனையடுத்து கருணாஸ் பேச்சுக்கு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினை கருத்து தெரிவிக்க சபாநாயகர் தனபால் அனுமதித்தார்.

அப்போது ஸ்டாலின், உறுப்பினர் கருணாஸ் கற்பனையாக எதை எதையோ சபையில் பேசுகிறார். அவர் கற்பனையாக பேசியதை பேரவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்றார்.

அதற்கு சபாநாயகர் தனபால் இருவர் பேசியதும் பேரவை குறிப்பில் இடம் பெறும் என்றார். இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து மீண்டும் கூச்சல் போட்டனர்.

அப்போது குறுக்கிட்டு பேசிய சபாநாயகர் ' நீங்கள் எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்ததும் சபை குறிப்பில் இடம் பெறும். அதனால் இந்த பிரச்சனையை இத்துடன் விடுங்கள்’ என்றார்.

’சபையில் ஒரு உறுப்பினர் இன்னொரு உறுப்பினரின் பெயரை சொல்லி குற்றம்சாட்டுவது மரபல்ல. உறுப்பினர் தனக்கு சரளமாக தமிழ் பேச வராது என்பதை சொல்லித்தான் தனது ஆங்கில பேச்சை தொடர்ந்தார். அதை கொச்சைப்படுத்தி கருணாஸ் பேசியுள்ளார்.

காங்கிரஸ் உறுப்பினர் கோபிநாத் தெலுங்கில் சபையில் பேசிய போது, முதல்வர் ஜெயலலிதா தெலுங்கிலேயே பதில் அளித்தார்.

முதல்வரின் பேச்சை கொச்சைப் படுத்தி பேசலாமா? பேரவை விதி 14ல் ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ பேசலாம் என தெளிவாக கூறப்பட்டுள்ளது என்று ஸ்டாலின் கூறினார்.

புது உறுப்பினர் என்பதால் இன்னொரு உறுப்பினரை காயப்படுத்தி பேசக்கூடாது என்று துரைமுருகன் கூறவே, அதற்கு சபாநாயகர் தனபால், தியாகராஜன் விளக்கம் சொல்லலாம் என்றார்.

நான் படித்தது முழுக்க ஆங்கிலத்தில், அதனால் பட்ஜெட்டில் உள்ள சில ஆங்கில வார்த்தைகளை தமிழில் சொல்வது என்பது எனக்கு சிரமமானது என்பதால், முதல்வருக்கு நன்கு புரியும் என்பதால் ஆங்கிலத்திலேயே பேசுகிறேன் என்று கூறி விட்டு தான் பேசினேன்.

என்னால் தமிழில் விளக்க முடிந்தவற்றை பேச்சின் போது அவ்வப்போது தமிழிலும் விளக்கி பேசினேன். கருணாசுக்கு புரியும்படி பேசுவதென்றால், எனக்கு ஒன்றும் பிரச்னையில்லை.

நிதி நிலை அறிக்கையை அவரது அரசியல் அறிவுக்கு எட்டும் அளவுக்கு என்னால் தமிழில் பேசமுடியும் என்று அவர் விளக்கம் அளித்தார்.

மேலும் அரசியல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments