சுவிஸில் டாக்ஸி சாரதி ஒருவருக்கு வாழ்நாள் தடை விதித்த நீதிமன்றம்: வெளியான காரணம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரத்தில் அனுபவம் மிகுந்த சாரதி ஒருவரை அவரது நடவடிக்கைகளால் இனி மேல் டாக்ஸி சாரதியாக அனுமதிக்க முடியாது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக குறித்த சாரதி மாகாண ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெர்ன் நகரத்தில் டாக்ஸி சாரதியாகும் பொருட்டு 63 வயதுடைய நபர் கடந்த 2019 மே மாதம் திறனாய்வு தேர்வுக்கு பதிவு செய்துள்ளார்.

ஆனால் அவரது மனுவை ஆய்வு செய்த பொலிசார் அவரது கோரிக்கையை நிராகரித்துள்ளனர்.

குறித்த நபர் ஓராண்டுக்கு முன்னர் சிறார் துஸ்பிரயோக காணொளிகளை சேகரித்ம்தல், அது தொடர்பான இணைய பக்கங்களை நாடுதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக குற்றஞ்சாட்டப்பட்டவர்.

மட்டுமின்றி, எதிர்வரும் 2023 வரை அவரால் இனி சாரதிகளுக்கான தேர்வெழுதும் புதிய விண்ணப்பத்தை சமர்ப்பிக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆனால், தாம் பேருந்து, டாக்ஸி உள்ளிட்ட வாகனங்களில் 15 ஆண்டுகள் சாரதியாக பணியாற்றி அனுபவம் பெற்றவர் எனவும், அதனால் தம்மை தேர்வெழுத அனுமதிக்க வேண்டும் என கோரி அந்த நபர் ஆளுநருக்கு மனு அளித்துள்ளார்.

ஏற்கனவே சிறார் துஸ்பிரயோக காணொளிகள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட நபரால், டாக்ஸியை பயன்படுத்தும் சிறார்கள் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக பொலிசார் அச்சம் தெரிவித்துள்ளனர்.

அவரது புகாரின் பேரின் தீர்ப்பு வழங்கிய பெர்ன் நிர்வாக நீதிமன்றம், பல தரப்பு வாதங்களின் அடிப்படையில் அவருக்கு அனுமதி மறுத்துள்ளது.

மட்டுமின்றி, கடந்த ஐந்து ஆண்டுகளில் குறைந்தது ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை அல்லது குறைந்தபட்சம் 180 பிராங்குகள் தினசரி அபராதம் விதிக்கப்பட்ட ஒருவர் டாக்ஸி சாரதிகளுக்கான தேர்வெழுத முடியாது என்ற விதியையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆனால் குறித்த சாரதி தினசரி 130 பிராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டவர் என்ற போதும், வழக்கின் தன்மையை கருத்தில் கொண்டு அவருக்கு அனுமதி அளிக்க முடியாது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்