ஐந்து ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்தால் தான் விவாகரத்து: வழக்கை தள்ளுபடி செய்த பிரித்தானிய நீதிமன்றம்

Report Print Kabilan in பிரித்தானியா

பிரித்தானியாவைச் சேர்ந்த வயதான தம்பதியரின் விவாகரத்து வழக்கை, அந்நாட்டு நீதிமன்றம் 5 ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்தால் தான் விவாகரத்து கொடுக்க முடியும் என்று கூறி தள்ளுபடி செய்துள்ளது.

பிரித்தானியாவைச் சேர்ந்த வயதான தம்பதி ஹக் ஓவன்ஸ்(80), டீனி ஓவன்ஸ்(68). இவர்களில் டீனி ஓவன்ஸ் திருமண வாழ்வில் மகிழ்ச்சி இல்லை என்று கூறி, விவாகரத்து செய்வதற்காக விண்ணப்பித்திருந்தார். ஆனால், பிரிவதற்கான வேறு எந்த வலுவான காரணம் எதையும் அவர் குறிப்பிடவில்லை.

டீனியின் கணவர் ஹக் ஓவன்ஸ் நீதிமன்றத்தில் கூறுகையில் ‘என் மனைவி மீது எந்தக் குற்றமும் நான் சுமத்த விரும்பவில்லை. அவரிடம் நான் மோசமாக ஒருபோதும் நடந்துகொண்டதில்லை. அவரது மனம் மாறும். நிச்சயம் ஒரு நாள் என்னிடம் திரும்பி வருவார். அதனால் நான் விவாகரத்தை நிராகரிக்கும்படிக் கேட்டுக் கொள்கிறேன்’ என தெரிவித்தார்.

அதன் பின்னர், வழக்கை விசாரித்த நீதிமன்றம், திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லை என்ற காரணம் மட்டும் விவாகரத்துக்குப் போதுமானதல்ல. பிரித்தானியாவின் விவாகரத்து சட்டப்படி கணவனும், மனைவியும் 5 ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்தால் தான் காரணம் இல்லாமல் கூட விவாகரத்து அளிக்க முடியும். 2020ஆம் ஆண்டில் டீனி வழக்கு தொடுத்தால் விவாகரத்து வழங்கலாம் என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.

இதுகுறித்து டீனி ஓவன்ஸ் கூறுகையில், ‘என்னுடைய 40 ஆண்டுகால வாழ்க்கை அலுத்துவிட்டது. குடும்பத்தை விட வேலை மீது தான் அவர் அதிக அக்கறை காட்டினார். மற்றவர்கள் முன்பு ஒரு மாதிரியும், தனிப்பட்ட முறையில் ஒரு மாதிரியும் நடந்துகொள்வார்.

விவாகரத்து செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலேயே ஒவ்வொரு செயலும் செய்துகொண்டிருந்தார். இதனால் என் மண வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியே இல்லாமல் கழிந்திருக்கிறது.

கடந்த 3 ஆண்டுகளாக என் கணவரை விட்டுப் பிரிந்து, இன்னொரு மனிதருடன் வாழ்ந்து வருகிறேன். ஆனால், நீதிமன்றம் என் விருப்பத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது வருத்தமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...