கொரோனாவுக்கெதிராக போராடும் மருத்துவ ஊழியர்களுக்கு ஆதரவாக திரண்ட பிரித்தானியர்கள்: இளவரசர்கள் முதல் பொதுமக்கள் வரை..

Report Print Balamanuvelan in பிரித்தானியா

கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையிலும், சோராது, தம் நலன், தம் குடும்பத்தார் நலம் கருதாது நோயாளிகளுடன் பணியாற்றி வரும் மருத்துவ ஊழியர்களை பாராட்டும் வகையில் பிரித்தானியா ஒன்று திரண்டது.

பிரித்தானிய குட்டி இளவரசர்கள் ஜார்ஜ், லூயிஸ், இளவரசி சார்லட் ஆகியோர் மருத்துவ ஊழியர்களுக்கு நாடு தெரிவிக்கும் நன்றிக்கு அடையாளமாக கைகளை தட்டுவதை துவக்கி வைக்க, பல மில்லியன் பிரித்தானியர்கள் தாங்களும் அவர்களுடன் இணைந்துகொண்டனர்.

இரவு எட்டு மணிக்கு தங்கள் வீட்டு வாசல்களிலும், பால்கனிகளிலும், தோட்டங்களிலும், ஜன்னல்கள் முன்பும் திரண்ட பிரித்தானியர்கள் பட்டாசுகளை கொளுத்தியும், கைகளை தட்டியும் தங்கள் நெஞ்சார்ந்த நன்றியை மருத்துவ ஊழியர்களுக்கு தெரிவித்துக்கொண்டனர்.

விண்ட்சர் மாளிகையில் தங்கியிருக்கும் பிரித்தானிய மகாராணியார், மருத்துவம் முதலான அவசர பணியாற்றும் துறைகளில் பணியாற்றும் அனைவருக்கும் நாடு நன்றிக்கடன் பட்டிருப்பதாக தெரிவித்தார்.

இளவரசர் சார்லஸ் ஸ்காட்லாந்தில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும், தன் கரங்களைத் தட்டி மருத்துவ ஊழியர்களுக்கு தன் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். இளவரசர் வில்லியமும் கேட்டும் தங்கள் பிள்ளைகள் கைகளைத் தட்டும் வீடியோவை வெளியிட்டிருந்தனர்.

அத்துடன் கெனிங்டன் மாளிகை வெளியிட்டிருந்த ட்வீட்டில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சோராமல் உழைக்கும் அனைத்து மருத்துவர்கள், நர்ஸ்கள், மருந்தக பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் அனைத்து மருத்துவ ஊழியர்களுக்கும் நன்றி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்களை பாராட்ட ஒன்று திரண்ட பிரித்தானியாவின் இந்த செயல்களால் நெகிழ்ந்துபோன மருத்துவ ஊழியர்கள், தங்கள் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், நீல நிறஇதயம் ஒன்றின் படத்துடன், தாங்கள் மிகவும் நெகிழ்ந்துபோனதாக ட்வீட் ஒன்றை வெளியிட்டிருந்தனர்!

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...