இந்தியாவின் மாயாஜால சுழலில் வீழ்ந்த மேற்கிந்திய தீவுகள்!

Report Print Kabilan in கிரிக்கெட்

ராஜ்கோட்டில் நடந்த டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை, 272 ஓட்டங்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியுள்ளது.

இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, நேற்று முன்தினம் ராஜ்கோட்டில் துவங்கியது.

நாணயச் சுழற்சி வெற்றி பெற்று இந்திய அணி முதலில் துடுப்பாட்டம் செய்தது. அறிமுக வீரர் பிரித்வி ஷா அதிரடியாக ஆடி 134 ஓட்டங்கள் குவித்தார். அவரைத் தொடர்ந்து, அணித்தலைவர் விராட் கோஹ்லி மற்றும் ஜடேஜா ஆகியோரும் சதம் விளாசினர்.

இதன்மூலம் இந்திய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 649 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. மேற்கிந்திய தீவுகள் அணி தரப்பில் பிஷூ 4 விக்கெட்டுகளும், லீவிஸ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

Getty Images

பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, இந்தியாவின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 181 ஓட்டங்களில் சுருண்டது. அந்த அணி தரப்பில் ரோஸ்டன் சேஸ் 53 ஓட்டங்களும், கீமோ பவுல் 47 ஓட்டங்களும் எடுத்தனர்.

இந்தியாவின் அஸ்வின் 4 விக்கெட்டுகளும், முகமது ஷமி 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர். அதன் பின்னர், 468 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி 2வது இன்னிங்ஸை துவங்கியது.

தொடக்க வீரர் பிராத்வெயிட்டை 10 ஓட்டங்களில் அஸ்வின் வெளியேற்றினார். அடுத்து வந்த ஹோப், ஹெட்மையர், அம்ரிஸ் மற்றும் சேஸ் ஆகிய நான்கு பேரின் விக்கெட்டுகளை தனது மாயாஜால சுழற்பந்து வீச்சில் குல்தீப் யாதவ் வீழ்த்தினார்.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மற்றொரு தொடக்க வீரர் கிரன் பவுல் அதிரடியான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். எனினும், 83 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவரும் குல்தீப் யாதவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அவரது விக்கெட்டைத் தொடர்ந்து ஏனைய விக்கெட்டுகளும் சரிய தொடங்கின. கடைசி இரண்டு விக்கெட்டுகளை ஜடேஜா வீழ்த்த, மேற்கிந்திய தீவுகள் அணி 196 ஓட்டங்களில் சுருண்டது. ஷான் டைரிச் 16 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்.

இதன்மூலம் இந்திய அணி 272 ஓட்டங்கள் மற்றும் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும், ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers