கடைசி ஓவரில் த்ரில் வெற்றி.. இங்கிலாந்தை சுருட்டி தொடரை சமன் செய்தது பாகிஸ்தான்: முதல் போட்டியிலே பட்டையை கிளப்பிய இளம் வீரர்

Report Print Basu in கிரிக்கெட்

இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3வது டி-20 போட்டியில் பாகிஸ்தான் அணி 5 ஓட்டங்களில் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிப்பெற்றது.

3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாட பாகிஸ்தான் இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது.

முன்னதாக நடந்த டெஸ்ட் தொடரை 1-0 என இங்கிலாந்திடம் இழந்தது பாகிஸ்தான். இந்நிலையில், டி-20 தொடரை கைப்பற்றி இங்கிலாந்திற்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இருந்தது பாகிஸ்தான்.

எனினும், முதல் டி-20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், 2-வது டி-20 போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்று 1-0 என தொடரில் முன்னிலைப்பெற்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் 3வது டி-20 போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் நடந்தது.

நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது, அதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 190 ஓட்டங்கள் குவித்தது.

முகமது ஹபீஸ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 86 ஓட்டங்கள் எடுத்தார். தனது முதல் சர்வதேச போட்டியில் களமிறங்கிய இளம் வீரர் ஹைதர் அலி 54 ஓட்டங்கள் அடித்து அசத்தினார்.

இங்கிலாந்து தரப்பில் பந்துவீச்சில் ஜோர்டன் 2 விக்கெட்டுகளையும், மொயின் அலி, curran தலா 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

191 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கி விளையாடியது.

19வது ஒவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு இங்கிலாந்து அணி 174 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் கடைசி ஓவரில் 17 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

எனினும், கடைசி ஓவரில் 11 ஓட்டங்கள் மட்டுமே எடுத்த இங்கிலாந்து அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தேல்வியடைந்தது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை பாகிஸ்தான் வீரர் ஹபீஸ் தட்டிச்சென்றார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்