50 பைசாவில் தொடங்கி வெற்றியாளராக திகழும் பெண்: சாதனை கதை

Report Print Gokulan Gokulan in தொழிலதிபர்

ஒவ்வொருவரின் வாழ்விலும் தோல்வி, மோசமான நாட்கள், தனிமை எனப் பல இருக்கும், ஆனால் அனைத்தையும் தாண்டி உறுதியாக நிற்பவர்களுக்கு எப்போதுமே வெற்றிதான் என்பதை நிருபணம் செய்யும் வெற்றிக்கதை தான் இது.

சென்னை மெரினாவில் துவங்கிய பயணம் இன்று முன்னணி உணவகங்களில் ஒன்றாகத் திகழ்கிறது பிரசன் சந்திப்பா ஹோட்டல்.

இதன் முதல் துவக்கம் ஒரு தள்ளுவண்டி கடையில் தான். இதன் உரிமையாளர் பட்ரிசியா நாராயன் பல தோல்விகளைக் கடந்து தற்போது வெற்றிகரமான இந்த ஹோட்டல்களை நடத்தி வருகிறார்.

பட்ரிசியாவின் தந்தை தபால் துறையிலும், தாய் டெலிபோன் துறையில் பணியாற்றி வந்தனர். சென்னை சாந்தோம் பகுதியில் வாழ்ந்து வந்தவர்.

சென்னை குயின்ஸ் மேரி கல்லூரியில் படித்து வந்த பட்ரிசியா, நாராயன் என்பவரைக் காதலித்தார். இதற்குப் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு நாராயனை திருமணம் செய்துகொண்டார்.

பெற்றோர்கள் கைவிட்ட நிலையில் அவரது கணவன் போதைப் பொருட்களுக்கு அடிமையானவர் என்பதை அறிந்து அதிர்ந்துபோனார். இதனால் வீட்டுச் செலவுகளுக்கும், 2 பிள்ளைகளை வளர்க்கவும் பணமில்லாமல் தவித்த பட்ரிசியா வீட்டிலேயே ஜாம், ஊறுகாய் போன்றவற்றைத் தயாரித்து விற்பனை செய்யத் துவங்கினார். இதன் விற்பனையில் இருந்து சிறு தொகை வந்தாலும் போதியதாக இல்லை. ஆனால் நம்பிக்கை பிறந்தது.

தள்ளுவண்டியில் டீ, சிகரெட் மட்டுமே விற்கப்பட்டு வந்த நிலையில், உணவுப் பொருட்களை விற்பனை செய்யத் திட்டமிட்டார்.

இதையடுத்து 1980-ல் ரிக்ஷா ஓட்டுநர்கள் துணையுடன் ஒரு தள்ளுவண்டியை மெரினா கடற்கரையில் கொண்டு சென்றார். இங்கு டீ, காபி மற்றுமல்லாமல் கட்லெட், சமோசா, பஜ்ஜி, ஜூஸ் எனப் பல உணவுப் பொருட்களை விற்கத் துவங்கினார்.

மேலும் கடைகளில் ஐஸ்கிரீம், சான்வெட்ஜ், பிரென்ச் பிரைஸ் மற்றும் ஜூஸ் வகைகளைச் சேர்த்தார். இதனால் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் உயர்ந்தது, இதன் காரணமாக 1982 - 2003ஆம் ஆண்டு இடைவேளையில் இக்கடையின் விற்பனை அளவு 0.50 பைசாவில் இருந்து 25,000 ரூபாயாக உயர்ந்தது. இதனால் மெரினா மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சென்னையிலும் பட்ரிசியா பிரபலம் அடைந்தார்.

குடிசை மாற்று வாரியம் தலைவரின் அனுமதியுடன் கேன்டீன் ஒன்றை துவங்கி, தினமும் காலையில் 5 மணிக்கு எழுந்து இட்லி வைத்துச் சமைத்து விட்டு 9 மணிக்கு கேன்டீன் செல்வார், அங்கு மதியம் 3.30 மணி வரையில் இருந்துவிட்டுப் பின் கடற்கரை கடைக்குச் சென்று இரவு 11 மணி வரையில் அங்கு இருப்பார். இதன் மூலம் ஒரு நாளுக்கு 3000 பேர் சாப்பிடும் அளவிற்கு வர்த்தகம் உயர்ந்தது.

தற்போது ஐசிஐசிஐ வங்கியாக விளங்கும் முந்தைய பாங்க் ஆப் மதுரா வின் கேன்டீனை நடத்த வாய்ப்புக் கிடைத்தது. குடும்பத்தில் பிரச்சனையால் கணவன் உடனான சண்டையால் மனம் உடைந்த பட்ரிசியா பஸ்சில் ஏறி கடைசி நிறுத்தம் வரையில் சென்றார்.

இறங்கிய இடத்தில் மத்திய அரச நடத்தும் தேசிய துறைமுக மேலாண்மை பயிற்சி பள்ளி இருந்தது. எந்தவிதமான யோசனையுமின்றி இதன் நிர்வாகத் தலைவரை சந்தித்து, தான் கேன்டீன் நடத்துவதாகவும், நீங்கள் கேன்டீன் ஒப்பந்தத்திற்காகத் புதிதாக ஒருவரை தேடி வருவதாகப் பொய்யாக ஒன்றைக் கூறினார். ஆனால் உண்மையிலேயே அவர்கள் கேன்டீன் நடத்த புதிதாக ஒருவரை தேடிக்கொண்டு இருந்தனர்.

இதன்மூலம் பட்ரிசியா தேசிய துறைமுக மேலாண்மை பயிற்சி பள்ளியில் கேன்டீன் நடத்த ஒப்பந்தம் பெற்றார்.

இதேபோல் தினமும் சுமார் 700 பேருக்கு உணவளிக்கும் ஒரு வாய்ப்புக் கிடைத்தது. அதுமட்டுமல்லாமல் பள்ளியிலேயே தங்குவதற்காக அவருக்கு ஒரு வீடும் கொடுக்கப்பட்டது.

அதன்பின் 1998ஆம் ஆண்டுச் சங்கீதா உணவக குழுமத்துடன் கூட்டணி அமைக்க வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் பட்ரிசியா மகன் பிரவின் ராஜ் குமார் தனியாக ஹோட்டல் அமைத்துத் தனிப் பிராண்டாக உருவாக வேண்டும் எனக் கூறினார்.

அப்போது பட்ரிசியா தனது மகளையும் மருமகனையும் ஒரு கார் விபத்தில் இழந்தார். இதனால் தனிப்பட்ட முறையிலும், வர்த்தக நிர்வாகத்தில் பின்தங்கினார் பட்ரிசியா.

பட்ரிசியா நிர்வாகத்தில் பின்தங்கினாலும், அவரது மகன் தனது திட்டத்தில் உறுதியாக இருந்து 2006ஆம் ஆண்டில் தனது சகோதரியின் பெயரில் சந்திப்பா என்ற பெயரில் ஹோட்டல் துவங்கினார் பிரவின். தனது மகளைப் பறிகொடுத்த அச்சிரபாக்கத்திலேயே புதிதாக ஆம்புலன்ஸ் சேவையையும் துவங்கினார்.

இப்படி அனைத்துத் தடைகளையும் தாண்டி வந்த பட்ரிசியாவுக்கு ‘FICCI Woman Entrepreneur of the Year விருது 2010ஆம் ஆண்டுக் கிடைத்தது. இப்படி விடாமுயற்சி கொண்டு வெற்றி பெற்ற சாதனை பெண்மணிக்கு சலாம் வைப்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers