வரலாற்றுப் பிரசித்தி பெற்ற புனித திருத்தல தரிசனப் பாதயாத்திரை ஆரம்பம்

Report Print Kavitha in நிகழ்வுகள்
30Shares

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத் தேர்த் திருவிழாவை முன்னிட்டு நேற்று வியாழக்கிழமை காலை யாழ். நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து புனித திருத்தல தரிசனப் பாதயாத்திரை ஆரம்பமானது.

குறித்த திருத்தல தரிசனப் பாதயாத்திரை நிகழ்வு இன்று காலை 08.30 மணியளவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய முன்றலில் கூட்டுப் பிரார்த்தனை மற்றும் விசேட வழிபாடுகளுடன் ஆரம்பமானது.

யாழ். சின்மயா மிஷனின் தலைவர் நிதா காசானந்தா சுவாமிகள் ஆசியுரை ஆற்றித் திருத்தல யாத்திரையை ஆரம்பித்து வைத்ததுடன் திருத்தல யாத்திரையில் பங்கேற்றுள்ள அடியவர்களுடன் இணைந்து நாம பூனையிலும் ஈடுபட்டார்.

இதன் போது நாயனமார்களால் அருளப்பட்ட திருப்பதிகங்கள் மற்றும் தெய்வீகப் பாடல்கள் பண்ணுடன் ஓதப்பட்டன.

யாழ். சின்மயா மிஷனின் தலைவர் நிதா காசானந்தா சுவாமிகள் ஈழத்துச் சித்தர் பரம்பரையின் முன்னோடியான தவத்திரு யோகர் சுவாமிகளின் “நல்லூரான் திருவடியை நான் நினைத்த மாத்திரத்தில்…” என்ற பாடலை நல்லூர்க் கந்தசுவாமி ஆலய முன்றலில் பண்ணுடன் பாட, அவருடன் இணைந்து யாத்திரையில் கலந்து கொள்ளும் அடியவர்கள் தம்மை மறந்து குறித்த பாடலைப் பாடியமை பக்தியின் உச்சமாக அமைந்திருந்தது.

அதனைத் தொடர்ந்து சிவலிங்கம் தாங்கிய ஊர்தி முன்னே செல்ல அடியவர்கள் நந்திக் கொடிகளை கைகளில் தாங்கி நாம பூனை வழிபாட்டுடன் பக்திபூர்வமாகத் திருத்தலப் பாதயாத்திரையில் கலந்து கொண்டுள்ளனர்.

இதேவேளை, இந்தத் திருத்தல யாத்திரை ஏ-09 வீதி வழியாக பல்வேறு ஆலயங்களையும் தரிசித்து வவுனியா நகரை அடைந்து அங்கிருந்து திருகோணமலை வீதி வழியாக திருக்கோணேஸ்வரர் ஆலயம் சென்று அங்கிருந்து பல ஆலயங்களையும் தரிசித்தவாறு எதிர்வரும்-29 ஆம் திகதி சனிக்கிழமை மட்டக்களப்பு மாமாங்கப்பிள்ளையார் ஆலயத்தில் இரவு தங்கி நின்று தரிசனம் செய்வர்.

அதனைத் தொடர்ந்து மறுதினம் 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அங்கிருந்து அடியவர்கள் பாதயாத்திரையாகப் புறப்பட்டு மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத் தேர்த் திருவிழாவில் கலந்து கொள்வார்கள்.

இலங்கை மணித் திருநாட்டில் அமைதி, சாந்தி, சமாதானம், நல்லிணக்கம், இனங்களுக்கிடையேயான பேதங்கள் நீங்கி ஒற்றுமை வளர இறையருள் வேண்டி இந்தப் புனித யாத்திரை யாழ். சின்மயா மிஷனின் ஆலோசனைக்கமைவாக இலங்கை முதலுதவிச் சங்க இந்துசமயத் தொண்டர் சபையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்