பள்ளி மாணவர்களை 6 மணி நேரமாக மரத்தில் கட்டி வைத்து அடித்த கொடூரம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் வேலியில் கிடந்த தர்பூசணியை பறித்து சாப்பிட்ட பள்ளி மாணவர்களை மரத்தில் கட்டி வைத்து அடித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் கருங்காளிவலசு கிராமத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் மூன்று பேர் பள்ளி விடுமுறை என்பதால், நேற்று காலை நல்லதங்காள் நீரோடையில் குளிக்க சென்றுள்ளனர்.

ஆனால் வெகுநேரமாகியும் இவர்கள் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அவர்களை கிராமம் முழுவதும் தேடிய போது, மாணவர்கள் நீரோடையின் கரையோரம் உள்ள ராமசாமி என்பவரின் தோட்டத்தில் உள்ள மரத்தில் மாணவர்கள் 3 பேரும் கயிற்றால் கட்டி வைக்கப்பட்டுள்ளனர்.

அதன் பின் மரத்தில் கட்டி வைக்கப்பட்ட மாணவர்களை மீட்டு அவர்களிடம் கேட்ட போது, ஆற்றில் குளித்து விட்டு வீடு திரும்பும் போது தோட்டத்து வேலியில் காய்த்திருந்த தர்பூசணியை பறித்து சாப்பிட்டோம்.

இதை தோட்டத்து உரிமையாளர் ராமசாமி பார்த்துவிட்டதால், அவர் எங்களை பிடித்து மரத்தில் கட்டி வைத்து ரப்பர் பைப், செருப்பு உள்ளிட்டவற்றால் தாக்கினார்.

குடிக்க கூட தண்ணீர் கொடுக்காமல் மரத்திலேயே கட்டி வைத்து சுமார் 6 மணி நேரமாக அடித்து உதைத்ததாக கூறியுள்ளனர்.

இதைக் கேட்டு ஆத்திரமடைந்த கிராம மக்கள், அவரை தேடிய போது அவர் தப்பி ஓடியுள்ளார். மயங்கி கிடந்த 3 சிறுவர்களையும் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர்.

தர்பூசணியை பறித்து சாப்பிட்டதை பெரிது படுத்தி மரத்தில் கட்டி வைத்து மாணவர்களை அடித்து, உதைத்த ராமசாமி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்களும் கிராம மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்