தொழிலதிபரை கொலை செய்த மனைவி, மகள்: வெளியான அதிர்ச்சி பின்னணி

Report Print Arbin Arbin in இந்தியா

தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில் தவறி விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்பட்ட தொழிலதிபர், கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்காக கொலை செய்யப்பட்டது அம்பலமாகியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக அவரது மனைவி, மகள் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராஜபாளையம் பகுதி ஐ.என்.டி.யூ.சி நகரைச் சேர்ந்தவர் 58 வயதான ஜெகநாதராஜா. இவர், ரியல் எஸ்டேட் உட்பட பல்வேறு தொழில்களை செய்து வந்தார்.

கடந்த 2016 ஜனவரி 2-ம் திகதியன்று, இவர் வீட்டின் மாடிப்படியிலிருந்து தவறி விழுந்து தலையில் அடிபட்டு இறந்ததாகக் கூறப்பட்டது.

இதுகுறித்து, ராஜபாளையம் தெற்கு பொலிசார் விசாரணை மேற்கொண்டு வழக்கை முடித்துள்ளனர்.

இந்நிலையில், தொழிலதிபர் ஜெகநாதராஜா இறப்பில் சந்தேகம் இருப்பதாக, அவரது தம்பி ராதாகிருஷ்ணராஜா, மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் அண்மையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இதுகுறித்து, உரிய விசாரணை மேற்கொள்ள எஸ்.பி. ராஜராஜனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதையடுத்து, விருதுநகர் மாவட்டக் குற்றப் பிரிவு பொலிசார் இவ்வழக்கில் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், இறந்ததாகக் கூறப்பட்ட தொழிலதிபர் ஜெகநாதராஜா திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சித் தகவல் தெரியவந்தது.

கொலை செய்யப்பட்ட ஜெகநாதராஜாவுக்கு, சுமார் ரூ.500 கோடிக்கு மேல் சொத்துகள் உள்ளன. அவரது மனைவி சொக்கத்தாய்(55), மகள் பிரியா(31) ஆகியோருக்கு தவறான தொடர்புகள் இருந்துள்ளன.

அவர்களுடன் இருவரும் பல இடங்களுக்கு சென்றுள்ளனர். இதையறிந்த ஜெகநாதராஜா அவர்களை கடுமையாக கண்டித்துள்ளார்.

தொடர்ந்து இவ்வாறு செய்தால், தனது சொத்துகளை தானம் அளித்துவிடுவேன் எனக் கூறியுள்ளார்.

இதனால், அதிர்ச்சி அடைந்த சொக்கத்தாயும், மகள் பிரியாவும் தங்களது கள்ளக் காதலர்களுடன் சேர்ந்து ஜெகநாதராஜாவைக் கொலை செய்து சொத்துகளை அபகரிக்கத் திட்டமிட்டனர்.

அதன்படி, ஜெகநாதராஜாவை உருட்டுக் கட்டையால் கடுமையாகத் தாக்கிக் கொலை செய்துவிட்டு, அவர் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்ததுபோல் நாடகமாடியுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக ராஜபாளையத்தைச் சேர்ந்த சத்தியாகுமார், எலெக்ட்ரிக்கல் நிறுவன உரிமையாளர் ராமராஜ், ஆசிலாபுரத்தைச் சேர்ந்த கருப்பையா ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர்.

இவ்வழக்கில் சொக்கத்தாயும், மகள் பிரியாவும் முன்ஜாமீன் பெற்றுள்ளதால் அவர்கள் இருவரும் கைது செய்யப்படவில்லை.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...