மனைவியை கொலை செய்து 300 துண்டுகளாக நறுக்கி டிபன்பாக்ஸில் அடைத்த கணவருக்கு ஆயுள்தண்டனை!

Report Print Vijay Amburore in இந்தியா

தனது மனைவியை 300 துண்டுகளாக நறுக்கி, உடல் பாகங்களை டிபன்பாக்ஸ்களில் அடைத்து வைத்த முன்னாள் இராணுவ வீரருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தியாவின் ஒடிஷா மாநிலத்தை சேர்ந்த முன்னாள் இராணுவ மருத்துவரான சோம்நாத் பரிதா (78), கடந்த 2013ம் ஆண்டு தனது மனைவி உஷஸ்ரீ சமலை (61) உடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது ஆத்திரமடைந்த அவர், இரும்பு கம்பியால் மனைவியின் தலையில் அடித்து கொலை செய்துள்ளார். பின்னர் அவருடைய உடலை 300 துண்டுகளாக நறுக்கி, சிறிய டிபன் பாக்ஸ்களில் அடைத்து வைத்துள்ளார். துர்நாற்றம் வெளியில் வந்துவிடக்கூடாது என்பதற்காக உடல்பாகங்களின் மீது பினாயிலை ஊற்றியுள்ளார்.

இதற்கிடையில் வெளிநாட்டில் இருந்த தம்பதியினரின் பிள்ளைகள் தொடர்ந்து போன் செய்துள்ளனர். ஆனால் எந்த பதிலும் கிடைக்காததால் தங்களுடைய உறவினர் ஒருவருக்கு தகவல் கொடுத்து வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளனர்.

அந்த நபர், நீண்ட நேரமாக கதவை தட்டியும் சோம்நாத் பதில் கொடுக்காததால், ஜன்னல் வழியே எட்டி பார்த்துள்ளார். அப்போது வீட்டிலிருந்து துர்நாற்றம் வந்ததால் சந்தேகத்தின் பேரில் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், வீட்டில் சோதனை மேற்கொண்டு உடல் பாகங்களை கைப்பற்றினர். ஆரம்பத்தில் மனைவி தற்கொலை செய்துகொண்டதாக கூறிவந்த அவர் இறுதியில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இந்த வழக்கானது 6 வருடங்களாக நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், தற்போது புவனேஸ்வரில் உள்ள உள்ளூர் நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும், ரூ .50,000 அபராதம் விதித்தும் உத்தரவிட்டது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்