கபசுரக் குடிநீர் கொரோனாவை கட்டுப்படுத்துமா? தமிழக தலைமை செயலர் சொல்வது என்ன?

Report Print Fathima Fathima in இந்தியா

"அறிவியல் ரீதியாக தற்போது வரை கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை, சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் கபசுரக்குடிநீர் குறித்து ஆய்வுகள் நடந்து வருகின்றன," என தமிழக தலைமை செயலர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா தாக்கத்தை பொறுத்தவரை, தமிழகத்தில் இரண்டு சதவீம் பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கவேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று ஆளுநர் மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய சண்முகம், தமிழகத்தில் அறிகுறிகள் தென்படும் நபர்களுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தியபடி சோதனைகள் செய்யப்படுகின்றது என்றும் வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டவர்கள் தொடர்ந்து கண்காணிப்பில் இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

''டெல்லியில் நடந்த ஒரு கூட்டத்திற்கு தமிழகத்திலிருந்து சென்று திரும்பிய சுமார் 700 நபர்கள் யார் என்றும் அவர்கள் எங்குள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் பலரை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளோம். அவர்களும் இரண்டு நாட்களில் கண்டறியப்படுவார்கள். நம்மிடம் பாதிப்புக்கு உள்ளவர்களைப் பார்க்கும்போது, வெளிநாடுகள், வெளிமாநிலத்திற்கு சென்றவர்கள்தான் அதிக பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். டெல்லி சென்று திரும்பியவர்களை, அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களை சோதனை செய்வதில் உறுதியாக இருக்கிறோம்,'' என தலைமைச் செயலர் சண்முகம் தெரிவித்தார்.

சித்த மருத்துவ கபசுரக்குடிநீர் கொரோனவை கட்டுப்படுத்துவதில் பலன் தருமா என செய்தியாளர்கள் கேட்டபோது, ''அறிவியல் ரீதியாக தற்போதுவரை கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை. கபசூரக்குடிநீர் தொடர்பான ஆய்வுகள் நடந்துவருகின்றன,'' என்றார்.

மருத்துவர்களுக்கு பாதுகாப்பு உடைகள் துரிதமாக வழங்கிவருவதாக கூறிய அவர், மூன்று அடுக்கு முகக்கவசங்கள் வாங்குவதற்கு ஆர்டர் கொடுக்கப்பட்டாலும், தமிழகத்தில் தயாரிக்கும் பணிகளும் நடந்து வருகின்றன என்றார்.

''தினமும் இரண்டு கோடி முகக்கவசங்கள் திருப்பூரில் தயாராகிறது. தமிழகத்தில் சிறைகளில் உள்ள கைதிகள் மூலமாக முகக்கவசங்கள் தயாரிக்கும் பணிகளும் நடந்துவருகிறன. அதேபோல சுயஉதவிக்குழுக்கள் மூலமாக கிருமிநாசினிகள் தயாரிப்புக்கான பணிகளும் நடந்துவருகின்றன,'' என்றார் சண்முகம். வென்ட்டிலேட்டர்களை மத்திய அரசு அளிக்கும் என்றாலும், தமிழக அரசு தாங்களாவே வென்ட்டிலேட்டர்களை வாங்க முயற்சி எடுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

- BBC - Tamil

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்