காலில் விழுந்த கணவன்: உலகில் இப்படியும் சில மனிதர்கள்!

Report Print Deepthi Deepthi in வாழ்க்கை முறை

கல்லூரிப்படிப்பை முடித்து தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்தும் வரும் பிரியா பார்ப்பதற்கு மிகவும் லட்சணமாக இருப்பாள்.

பிரியாவுக்கு இரண்டு சகோதரிகள். இவள் மூத்தவள் என்பதால் மிகவும் பொறுப்பாக நடந்துகொள்வாள். இந்நிலையில், உறவினர்கள் உதவியோடு இவளுக்கு மாப்பிள்ளை பார்த்துவந்தனர்.

சுயமாக கோழிப்பண்ணை வைத்திருக்கும் வரன் ஒன்று அமைந்தது. பெண் பார்க்கும் படலம் நடந்தபோது தனது பையனை பற்றி ஒரு உண்மையை கூறினார் தாய்.

எனது மகன் மிகவும் நல்லவன்...ஆனால் கொஞ்சம் குடிகாரன் என கூறியுள்ளார். இதனைக்கேட்ட பிரியா அதிர்ந்துபோனாள்.

ஆனால், தனது மகன் குடிகாரனாக இருந்தாலும், அவனை திருத்தி உன் வழிக்கு கொண்டு வரும் வல்லமை உன்னிடம் இருக்கிறது.

அந்த அளவுக்கு நீ புத்திசாலி பெண். ஒரு குடும்பத்தை பொறுப்பாக நடத்தும் திறமை உன்னிடம் உண்டு என்று புகழ்ந்து பேசி, ஒரு வழியாக சம்மதத்தை பெற்றார்.

நிச்சயதார்த்தம் முடிந்த 3 மாதங்களில் திருமணம் நடைபெற்றது. மாமியார் சொன்னது போலவே, கணவன் படுகுடிகாரனாக இருந்துள்ளார். திருமணம் முடிந்து அவனிடம் மாற்றம் ஏற்படவில்லை.

தினமும் குடித்துவிட்டு வீடு திரும்பினான். அவள் பக்குவமாக எடுத்துசொல்லிப்பார்த்தாள். பலனில்லை, பின்பு தட்டிக்கேட்டாள், உடனே அவன் வீட்டிற்கு வராமல் கோழிப்பண்ணையிலே அதிகமாக குடித்துவிட்டு தூங்கத் தொடங்கினான், அவனது உடல் நலம் பாதித்தது.

தான் இரவில் வீட்டிற்கு வராமல் இருப்பதும், தனது உடல் நோய்வாய்ப்பட்டுப்போனதும் மனைவிக்கு சாதகமாகிவிட்டது. அதனால் மற்ற ஆண்களோடு நெருக்கமாக பழகுகிறாள் என்று அவன் சந்தேகம் கொண்டான்.

நான் இல்லாத நேரத்தில், வேறு ஆண்களை வீட்டுக்கு வரவழைத்து குடும்பம் நடத்துகிறாயா? என அவள் மனம் புண்படும்படியாக கேள்வியை கேட்டு சித்ரவதை செய்தான்.

ஆனால், இதையெல்லாம் பொறுத்துக்கொண்ட அவள், தனது குடும்பத்தின் சூழ்நிலை அறிந்து தனது கணவனை விட்டு பிரிந்துசெல்லாமல் அனுசரித்துசென்றாள்.

ஆனால், காலப்போக்கில் அவனின் அட்டூழியம் அதிகரிக்கவே, இனிமேலும் அவனோடு வாழமுடியாது என்று கருதிய அவள், தனது தாய் வீட்டிற்கு செல்ல தீர்மானித்தாள்.

அதை கணவரிடம் சொன்னதும் அப்படியே அவளது காலில் விழுந்துவிட்டான். ‘நீ என்னை விட்டு போய்விடாதே! நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது’ என்று காலைப் பிடித்துக்கொண்டு கதறினான்.

கணவனின் கதறளை தாங்கிகொள்ள முடியாத அவள், அவனுடன் சேர்ந்து வாழ ஆரம்பித்தாள். ஆனால் சுடுகாட்டு பேய் பிடித்துவிட்டால் கூட மாந்தீரிகம் மூலம் அதனை விரட்டிவிடலாம், ஆனால் மனிதனுக்கு சந்தேகப்பேய் பிடித்துவிட்டால், அதனை விரட்டுவதற்கு எந்த சக்தியும் இந்த உலகில் இல்லை.

காலில் விழுந்து மனைவியிடம் சம்மதம் வாங்கிய இவன். அதன்பின்னர் தான் தனது மனைவியை அதிகமாக நோட்டமிட ஆரம்பித்தான். அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியவுடன் அவளது கைப்பேசியை வாங்கி பார்ப்பது. அவள் அமர்ந்திருந்தாள் அவளின் அருகில் சென்று அமர்ந்துகொண்டு, அவள் என்ன செய்கிறாள் என்பதை பார்த்துக்கொண்டிருப்பது.

தான் தூங்கும் நேரத்தில் யாரேனும் ஆண்கள் வந்து மனைவியை பார்ப்பார்களா? என்ற சந்தேகத்தில் தனது தூக்கத்தை தொலைத்துவிட்டு மனைவியை வேவு பார்க்கிறான்.

இதையெல்லாம் அறிந்திருந்தும் மனவேதனையில் தனது தாய் வீட்டிற்கு சென்றுவிடுகிறேன். நீயாவது நிம்மதியாக வாழ் என்று கூறினால் மறுபடியும் காலில் விழுந்துவிடுகிறான்.

இப்படியே காலில் விழுவதும், சந்தேகப்படுவதுமாய் வாழ்க்கை நகர்ந்துகொண்டிருக்கிறது.

உலகில் இப்படியும் சில மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், என்ன செய்வது நாம் தான் உஷாராக இருக்க வேண்டும்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments