இந்தோனேசிய விமான நிலையத்தில் தாமதமான விமானத்தை பிடிக்க பெண் ஒருவர் அத்துமீறி ஓடுதளத்தில் ஒடியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவின் பாலி பகுதியில் உள்ள நகுரா ராய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து, QG 193 என்ற விமானம் ஜகார்த்தாவின் ஹாலிம் பெர்டானகுசுமா விமான நிலையம் நோக்கி காலை 7.20 மணிக்கு புறப்பட்டது.
அப்போது வேகமாக தடுப்புகளை மீறி ஓடுதளத்தில் புகுந்த பெண் ஒருவர் விமானத்தை நோக்கி விரட்டி சென்றுள்ளார்.
இதனை பார்த்த அதிகாரிகள் விரைந்து சென்று அந்த பெண்ணை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் விமானத்தை தவற விட்டதாகவும், ஓடுதளத்திற்கு சென்றால் ஏற்றிக்கொள்வார்கள் என நினைத்து தான் விரட்டி சென்றிருப்பதும் தெரியவந்தது.
இந்த வீடியோ காட்சிகளை இணையத்தில் வெளியானது நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர்.
இந்த நிலையில் இதற்கு விளக்கம் அளித்துள்ள விமான நிர்வாக அதிகாரி, அந்த பெண் அன்று மாலை வேறு ஒரு விமானத்தின் மூலம் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டார் என தெரிவித்துள்ளார்.