ஈரான் அரசுக்கு எதிராக கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டுவரும் முஜாஹிதீன்-இ-கலாக் என்ற அமைப்பில் இருந்து இளைஞர்கள் உள்ளிட்ட பலர் வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த அமைப்பின் கடுமையான சட்டங்களே இளைஞர்களை அந்த அமைப்பில் இருந்து வெளியேறத் தூண்டுவதாக தனியார் செய்தி ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த ஆறு ஆண்டுகளாக அல்பேனியா முஜாஹிதீன் அமைப்பின் தலைமையிடமாக இருந்து வருகிறது.
இளைஞர்கள் பாலியல் உறவை கைவிட வேண்டும் எனவும், குடும்பத்தாருடன் எவ்வித தொடர்பும் கூடாது என்பதும் அந்த அமைப்பின் முக்கிய சட்டங்களில் சில என தெரியவந்துள்ளது.
அந்த அமைப்பில் செயல்படுவதை கைவிட்டு அல்பேனியாவில் இருந்து வெளியேறியவர்கள் பெரும்பாலும்,
ஈரான் நாட்டுக்கு திரும்பவும் முடியாமல் பழைய வாழ்க்கையை தொடரவும் முடியாமல் தத்தளிப்பதாக கூறப்படுகிறது.

மேலும் அந்த அமைப்பில் இருந்து வெளியேறியவர்கள் பெரும்பாலும் அல்பேனியா தலைநகர் திரானாவில் குடியிருந்து வருகின்றனர்.
அதில் ஒருவரான 60 வயது கோலம் மிர்சாய், 37 ஆண்டுகளாக மனைவியுடனும் மகனுடனும் ஒருமுறை கூட பேசியது இல்லை.
தாம் இறந்ததாக கருதியிருந்த அவர்களிடம், தொலைபேசியில் அழைத்து உயிருடன் இருக்கிறேன், இறக்கவில்லை என கூறியதற்கு, அவர்களின் அழுகைச்சத்தம் மட்டுமே கேட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளாக முஜாஹிதீன்-இ-கலாக் அமைப்பில் இருந்து வெளியேறிய கோலம், தற்போது திரானா பகுதியில் கடும்துயர் அனுபவித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
ராணுவ கட்டமைப்பு கொண்ட முஜாஹிதீன் முகாமில் இருந்து உயிரை கையில் பிடித்துக் கொண்டு தப்பியதாக கூறும் கோலம்,

இறப்பதற்கு முன்னர் ஒருமுறையேனும் குடும்பத்தை சந்திக்க வேண்டும் என்ற தூண்டுதலே தம்மை அந்த முகாமில் இருந்து வெளியேற காரணம் என தெரிவித்துள்ளார்.
தனிமனித உரிமைகளை பறித்த காரணத்தாலையே இளைஞர்கள் பலர் அமைப்பை கைவிட்டு வெளியேறியதாக அவர் தெரிவித்துள்ளார்.
பாலியல் உறவுக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டதும், திருமணம் மற்றும் காதலுக்கு தடை விதித்ததும் இளைஞர்களை வெளியேற தூண்டியது.
மட்டுமின்றி திருமணமானவர்களை கட்டாயப்படுத்தி விவகரத்து செய்ய வைத்தனர். பிள்ளைகளை ஐரோப்பிய நாடுகளில் உள்ள தத்தெடுப்பு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கோலம் தெரிவித்துள்ளார்.