ஈரானை சுற்றி வளைத்திருக்கும் அமெரிக்க துருப்புகள்... எந்த நாடுகளில் எத்தனை பேர்: வெளியான பட்டியல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஈரானுக்கும் அமெரிக்காவும் இடையே பதற்றம் நீடிக்கும் நிலையில், ஈரானின் அண்டை நாடுகளில் குவிக்கப்பட்டிருக்கும் அமெரிக்க துருப்புகளின் எண்ணிக்கை வெளியாகியுள்ளது.

ஈரானிய குத்ஸ் படைகளின் தலைவர் குவாசிம் சுலைமானியை அமெரிக்கா படுகொலை செய்துள்ள நிலையில்,

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் நீடித்து வருகிறது. மட்டுமின்றி, உக்ரேனிய பயணிகள் விமானத்தை ஈரான் துருப்புகள் தவறுதலாக சுட்டு வீழ்த்தியுள்ளது,

ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் ஈரான் மீது மறைமுக நெருக்குதலை ஏற்படுத்தி வருகிறது.

மத்திய கிழக்கு நாடுகளிடம் ஈரான் ஆதரவு கோரியுள்ள நிலையில், சவுதி அரேபியா சாமர்த்தியமாக ஈரான் - அமெரிக்கா விவகாரத்தில் தலையிட முடியாது என விலகியுள்ளது.

எஞ்சிய நாடுகள், ஆபத்து வேளையில் ஈரானுக்கு உதவும் என்றே நம்பப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இருந்து அமெரிக்க மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் துருப்புகளை வெளியேற்ற வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையுடன் ஈரான் தனது நகர்வுகளை முன்னெடுத்து வருகிறது.

இதற்கு முன்னோடியாகவே ஈராக்கிய பாராளுமன்றம், அமெரிக்க துருப்புகள் அனைத்தும் தங்கள் நாட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்ற பிரேரணையை ஒருமனதாக நிறைவேற்றியது.

ஆனால் அதற்கு உரிய மரியாதையை அமெரிக்க துருப்புகள் அல்லது அமெரிக்க அரசாங்கம் இதுவரை அளிக்கவில்லை.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஆட்சிப் பொறுப்பேற்ற துவக்க காலகட்டத்தில், மத்திய கிழக்கில் இருந்து தங்கல் நாட்டு துருப்புகளை படிப்படியாக வெளியேற்றுவதாக உறுதி அளித்திருந்தார்.

ஆனால் இதுவரை அந்த நடிவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை என்பது மட்டுமின்றி, சமீபத்தில் 4,000 துருப்புகளை ஈராக் உள்ளிட்ட நாடுகளுக்கு அனுப்பியும் வைத்துள்ளது.

இந்த நிலையில், ஈரானின் அண்டை நாடுகளில் பாதுகாப்பு பணிகளுக்காக குவிக்கப்பட்டிருக்கும் அமெரிக்க துருப்புகளின் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஈரானுக்கு மிக அருகாமையில் இருக்கும் குட்டி நாடான குவைத்தில் மட்டும் அமெரிக்க துருப்புகள் 13,000 பேர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈராக்கில் 6,000 பேர். ஐக்கிய அமீரகத்தில் 5,000 பேர். ஓமான் நாட்டில் 600 பேர். கட்டார் நாட்டில் 13,000 பேர்.

இதேபோன்று சவுதி அரேபியாவில் 3,000 பேர். பஹ்ரைன் நாட்டில் 7,000 அமெரிக்க வீரர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஜோர்தானில் 3,000 பேரும் சிரியாவில் 800 பேரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் 14,000 பேர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 4- ஆம் திகதி வெளியான தகவலின் அடிப்படையில் துருக்கியில் மட்டும் 2,500 அமெரிக்க ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இது ஒரு புறமிருக்க, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இருந்து ஐரோப்பிய நாடுகளின் துருப்புகள் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை ஈரான் ஜனாதிபதி ரூஹானி முன்வைத்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்