உலகில் கொரோனா தாக்கியவர்களின் எண்ணிக்கை, வரலாறு காணாத அளவில் ஒரே நாளில் 307,930 உயர்ந்துள்ளதாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.
ஒரே நாளில் 307,930 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, உலகம் முழுமையிலும் கொரோனா தாக்கியவர்களின் எண்ணிக்கை 28.6 மில்லியன், அதாவது 2 கோடியே 86 இலட்சமாக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து பல நாடுகளில் புதிதாக கொரோனா தொற்றுக்கள் கண்டறியப்பட்டு வருவதால், குளிர் காலத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சத்தில் அவை புதிய பயணக்கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.
கடந்த சனிக்கிழமையன்று பிரான்சில் முதன்முறையாக புதிதாக 10,000 பேருக்கு கொரோனா தொற்று உருவானதும், ஸ்பெயின் நாட்டில் சராசரியாக நாளொன்றிற்கு 9,600 பேருக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உருவாகிவருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில், ஐரோப்பாவில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக உலக சுகாதார மைய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.