பெண்கள் உரிமை ஆர்வலருக்கு பயங்கரவாத வழக்கில் சிறை: குமுறும் குடும்பம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
227Shares

சவுதி அரேபியாவில் பெண்கள் உரிமை ஆர்வலர் லூஜெய்ன் அல்-ஹத்லூலுக்கு சிறப்பு குற்றவியல் நீதிமன்றம் 5 ஆண்டுகள், 8 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மாற்றத்திற்காக கிளர்ச்சி செய்தல், வெளிநாட்டு நிகழ்ச்சி நிரலைப் பின்பற்றுவது மற்றும் பொது ஒழுங்கிற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இணையத்தைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் அல்-ஹத்லூல் நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதாக சவுதியின் அரசு செய்தி நிறுவனம் திங்களன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அவருக்கு 30 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018 மே மாதம் லூஜெய்ன் கைது செய்யப்பட்டார். தண்டனை குறித்து பேசிய லூஜெய்ன் சகோதரி லீனா, எனது சகோதரி தீவிரவாதி கிடையாது. அவர் ஒரு போராளி எனக் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

முன்னதாக லூஜெய்னுக்கு 5 ஆண்டுகள் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டபோது அவர் நீதிமன்றத்தில் கதறி அழுதுள்ளார். இதற்கிடையே, தண்டனையை எதிர்த்து லூஜெய்ன் மேல்முறையீடு செய்ய உள்ளதாக சகோதரி லீனா தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியாவில் பெண்களுக்கு எதிரான சட்டதிட்டங்கள் அதிகம். அவற்றை உடைக்க பாடுபட்டவர் இந்த லூஜெய்ன்.

சவுதியில் சமீபத்தில் தான் பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி தரப்பட்டது. இதற்கு விதை போட்டவர் லூஜெய்ன்தான்.

பெண்கள் கார் ஓட்ட, வேலைக்கு செல்ல, வெளிநாடு செல்ல பல்வேறு உரிமைகளை கேட்டு போராடினார் லூஜெய்ன்.

போராடி கொண்டிருந்தபோதே லூஜெய்ன் உள்ளிட்ட சில பெண்கள் ஆர்வலர்கள் உள்ளூர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

லூஜெய்ன் கைது செய்யப்பட்ட ஒரு வாரத்துக்கு பின்பு, பெண்களை வாகனம் ஓட்ட அனுமதிக்கும் வரலாற்று உத்தரவை சவுதி அரசு பிறப்பித்து.

இருப்பினும் இவரின் கைது சர்வதேச அளவில் எதிர்ப்பலைகளை சம்பாதித்தது. உடனே விடுதலை செய்யும்படி தொடர்ந்து சர்வதேச நாடுகள் சார்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது.

ஆனால், சவுதி அரசு அதை கண்டுக்கொள்ளவில்லை என்றே கூறப்படுகிறது. ரியாத்தின் குற்றவியல் நீதிமன்றத்தில் லூஜெய்ன் மீதான விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது.

இதன்பின்னர் பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றத்திற்கு (சிறப்பு குற்றவியல் நீதிமன்றம்) மாற்றப்பட்டு தற்போது தண்டனை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்