ரஷ்யாவை குற்றப்படுத்த வேண்டாம்: பிரித்தானிய தொழிற்கட்சித் தலைவர் காட்டம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

முன்னாள் ரஷ்ய உளவாளிகள் தாக்கப்பட்ட விவகாரத்தில் உறுதியான ஆதாரங்களின்றி ரஷ்யாவை குற்றப்படுத்த வேண்டாம் என பிரித்தானிய தொழிற்கட்சித் தலைவர் ஜெர்மி கார்பின் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் கொள்கைகளுக்கு உட்பட்டு தாம் ரஷ்யாவுடன் நல்லுறவை பேண விழைவதாகவும் கார்பின் உறுதிபட தெரிவித்துள்ளார்.

மேலும் உளவாளியை தாக்க பயன்படுத்தப்பட்ட குறித்த நச்சுப்பொருள் எங்கிருந்து வரவழைக்கப்பட்ட என்ற கேள்விக்கு உண்மையான பதில் தேட வேண்டும் எனவும் கார்பின் அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.

தனியார் வானொலி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தாம் ஆட்சிக்கு வந்தால் மனித உரிமைகள் தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்புவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் கார்பினின் குறித்த நிலைப்பாட்டை அவரது சொந்த கட்சி எம்.பிக்கள் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதனிடையே, உறுதியான காரணங்கள் இன்றி குருட்டுத்தனமாக ஒருவர் மீது பழிபோடுவது ஏற்புடையது அல்ல என தெரிவித்துள்ள கார்பின், குறித்த சம்பவம் தொடர்பாக அனைவரும் ரஷ்யா மீதே குற்றஞ்சாட்டுவது நிபுணர்களின்அறிக்கை வெளியானதற்கு பின்னர் என்றால் அதை வரவேற்கலாம் என்றார்.

உளவாளி மீது பயன்படுத்தப்பட்ட ஆயுதம் ரஷ்யாவுடையது என்பது உறுதியான தகவல் என்றால், அது பிரித்தானியாவில் எவ்வாறு வந்தது என்ற கேள்விக்கு கண்டிப்பாக பதில் வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே இந்த விவகாரம் தொடர்பில் பிரதமர் தெரேசா மே மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவளிப்பதாக தொழிற்கட்சி எம்.பி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 4 ஆம் திகதி ரஷ்ய முன்னாள் ராணுவ உளவுத்துறை அதிகாரி Sergei Skripal(66) மற்றும் அவரது மகள் யூலியா மீது நச்சு ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டது.

மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்ட பிரித்தானியா அரசு, ரஷ்ய தூதரக அதிகாரிகள் 23 பேரை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டது.

ஆனால் இந்த விவகாரம் தொடர்பில் தங்களுக்கு எந்த பங்கும் இல்லை என ரஷ்யா மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்