ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்த பிரித்தானிய குடும்பத்திற்கு நேர்ந்த சோகம்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் சேருவதற்காக பிரித்தானியாவை விட்டு வெளியேறிய குடும்பத்தினர் அனைவரும் உயிரிழந்துவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்த முஹம்மது மன்னன் மற்றும் அவரது மனைவி மினெரா தங்களுடைய ஒட்டுமொத்த குடும்பத்தையும் அழைத்துக்கொண்டு, கடந்த 2015ம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

மே மாதம் அண்டை நாடான துருக்கிக்கு சென்று, அங்கிருந்து பங்களாதேஷில் உள்ள உறவினர்களைப் பார்வையிட்டு வீடு திரும்பும் வழியில் அவர்கள் மாயமானதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

அடுத்த இரண்டு மாதங்களுக்கு பிறகு மன்னன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டார். அதில், இஸ்லாமிய அரசுக்கு தங்கள் குடும்பத்தின் ஆதரவையும், 'மனிதனால் உருவாக்கப்பட்ட சட்டத்தின் ஊழல் மற்றும் ஒடுக்குமுறையிலிருந்து விடுபட்டு ஷரியாவால் நிர்வகிக்கப்படும் ஒரு நிலத்தில் இருப்பதில் தாங்கள் மகிழ்ச்சியடைவதாகவும்' தெரிவித்திருந்தார்.

மேலும் அதில், 'இஸ்லாமிய அரசுக்கு வருவதற்காக தினமும் நிலத்தையும், கடலையும் கடந்து உலகின் எல்லா மூலைகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் வருகைதரும் போது, நாங்கள் 12 பேர் சேர்ந்திருப்பதை ஏன் அதிர்ச்சியாக பார்க்கிறீர்கள்' என கேட்டிருந்தார்.

இந்த அறிக்கையானது அந்த சமயத்தில் அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாக இடம்பிடித்தது.

இந்த நிலையில் அந்த குடும்பத்தை சேர்ந்த அனைவரும் உயிரிழந்துவிட்டதாக மன்னனின் மூத்த மனைவிக்கு பிறந்த சலீம் என்கிற மகன் கூறியுள்ளார்.

நீரிழிவு மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட மன்னன் 75 வயதில் உயிரிழந்ததாகவும், அவருடைய மனைவி புற்றுநோயால் உயிரிழந்ததாகவும் கூறியுள்ளார். அதேபோல அவருடைய 7 சகோதரர்கள் வான்வழித் தாக்குதலில் இறந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்