பிரெக்சிட்: மீண்டும் குட்டையை குழப்பிய பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்: அடுத்து என்ன?

Report Print Balamanuvelan in பிரித்தானியா

இத்தனை நாட்களாக பாடுபட்டு பிரித்தானிய பிரதமர் தயாரித்த பிரெக்சிட் தொடர்பான ஒப்பந்தத்தின் மீதான வாக்குப்பதிவு என்ன ஆகுமோ என மக்கள் காத்திருந்த நேரத்தில், மீண்டும் குழப்பமான ஒரு சூழலை உருவாக்கியுள்ளார்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர்.

சனிக்கிழமை சுமார் ஐந்து மணி நேர விவாதத்திற்குப்பின், பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என்ற வாக்குப்பதிவு நடத்த அனைவரும் தயாரானார்கள்.

ஆனால், கடைசி நேரத்தில் Oliver Letwin என்னும் நாடாளுமன்ற உறுப்பினர் மொத்த பிரெக்சிட் திட்டத்தையும் குழப்பிவிட்டார்.

REUTERS

அவர், போரிஸ் ஜான்சனின் ஒப்பந்தம் சட்டப்பூர்வமாக்கப்படும் வரையில் அவரது ஒப்பந்தத்திற்கு ஆதரவளிப்பதை கிடப்பில் போடவேண்டும் என ஒரு சட்டதிருத்தத்தை முன்வைத்தார்.

ஏற்கனவே, எப்படியாவது போரிஸ் ஜான்சனின் திட்டங்களை கவிழ்க்க வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டிருந்த எதிர்க்கட்சியினரும் அவருடன் இணைந்துகொள்ள, பிரதமரின் ஒப்பந்தத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு பதிலாக Oliver Letwinஇன் சட்டத்திருத்தத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அதில் அவர் வெற்றியும் பெற்றார். 322 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு ஆதரவாக வாக்களிக்க 306 பேர் அதை எதிர்த்து வாக்களித்தனர்.

அதாவது, போரிஸ் ஜான்சனின் ஒப்பந்தம் மீது வாக்கெடுப்பு நடத்தப்படவேயில்லை. இதனால் என்ன ஆனது என்றால், Benn Act என்ற சட்டத்தின்படி, போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரெக்சிட்டுக்கு, அதாவது பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேறுவதற்கு மீண்டும் காலத்தவணை கேட்கவேண்டிய ஒரு சூழல் உருவாகிவிட்டது!

பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு இன்னொரு முறை ஐரோப்பிய ஒன்றியத்திடம் தவணை கேட்க கொஞ்சமும் விருப்பம் இல்லை என்றாலும், சட்டப்படி அவர் அதை செய்துதான் ஆகவேண்டும் என்பதால், கையொப்பமிடாமலே, பிரெக்சிட் திகதியை தள்ளி வைக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்திடம் தவணை கேட்டு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் அவர்.

இதற்கிடையில், ஒரு வேளை ஐரோப்பிய ஒன்றியம் தவணை கொடுக்க மறுத்துவிட்டால், அதனால் ஒப்பந்தங்களற்ற ஒரு பிரெக்சிட் நிறைவேற்றப்பட வேண்டிய சூழல் உருவாகுமானால், அதற்கும் தயாராக இருப்பதற்கான நடவடிக்கைகளை கேபினட் அலுவலகம் தொடங்கிவிட்டது.

இன்று, Letwin சட்டதிருத்தம் இல்லாமலே, மீண்டும் போரிஸ் ஜான்சனின் ஒப்பந்தம் மீது வாக்கெடுப்பு நடத்த அரசாங்கம் முயற்சி செய்யும்.

ஆனால், ஏற்கனவே இது தொடர்பான விவாதங்கள் நடத்தப்பட்டுவிட்ட நிலையில், மீண்டும் அதையே திரும்பச் செய்து, வாக்கெடுப்பு நடத்த வேண்டியிருப்பதால், அதற்கு சபாநாயகர் அனுமதி அளிப்பாரா என்பது தெரியாது.

முடிவாக, இந்த இழுபறிகளால் அக்டோபர் 31ஆம் திகதி ஒப்பந்தம் எதுவும் இல்லாமலே ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு பிரித்தானியா பிய்த்துக் கொண்டு வெளியேறும் ஒரு சூழல் உருவாகலாம்.

ஆனால், அவையெல்லாம், ஐரோப்பிய ஒன்றியம் அக்டோபர் 31க்கு பிறகு பிரெக்சிட்டை நீட்டிக்க ஒப்புதல் அளிக்குமா என்பதைப் பொறுத்துதான் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

CNN

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்