திடீரென கட்டியணைத்த முன் பின் தெரியாத இளம்பெண்... காதில் கிசுகிசுத்த தகவல்: இளைஞர் செய்த செயலுக்கு குவியும் பாராட்டு!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

நியூ ஜெர்சியைச் சேர்ந்த ஒரு இளைஞர், நியூயார்க் ரயில் நிலையம் ஒன்றில் நிற்கும் போது, முன் பின் தெரியாத ஒரு இளம்பெண் ஒருவர் திடீரென அவரைக் கட்டியணைத்துள்ளார்.

அந்த இளைஞர் அதிர, அதற்குள் அந்த இளம்பெண் அவரது காதில், தன்னை மூன்று ஆண்கள் வெகு நேரமாக தொடர்வதாகவும், தயவு செய்து தன்னை தெரிந்தது போல் காட்டிக்கொள்ளுமாறும் மிகவும் மெல்லிய குரலில் கெஞ்சியுள்ளார்.

நிலைமை அறிந்து உடனடியாக அந்த பெண்ணை தெரிந்தது போல் காட்டிக்கொண்ட அந்த இளைஞர், பின்னர் அந்த பெண்ணின் வீடு வரை அவரைக் கொண்டு விட்டு வந்துள்ளார். பின்னர் என்ன நடந்தது என்பதை அந்த பெண் விளக்கியுள்ளார்.

அவர் ரயிலில் பயணித்துக்கொண்டிருக்கும்போது, மூன்று ஆண்கள் அவரையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்துள்ளார் அந்த இளம்பெண்.

அவர் ரயிலிலிருந்து இறங்கவும், அந்த மூன்று ஆண்களும் கூடவே இறங்கியிருக்கிறார்கள்.

தன்னை அவர்கள் பின் தொடர்வதைக் கண்டதும், அச்சம் மேலிட, அருகிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிற்குள் நுழைந்துள்ளார் அந்த பெண்.

சற்று நேரம் கழித்து வெளியே வந்தால், அப்போதும் அந்த ஆண்கள் அங்கேயே நின்றிருக்கின்றனர்.

மீண்டும் அவர் நடக்கத் தொடங்க, அவர்களும் பின்னாலேயே வந்திருக்கிறார்கள். அப்போது தான் அந்த பெண்ணுக்கு இந்த ஐடியா தோன்றியிருக்கிறது.

ரயில் நிலையத்தில் புன்னகை பூத்த முகத்துடன் தனது மொபைலில் ஏதோ பார்த்துக்கொண்டிருந்த ஒருவரைக் கண்டதும், இவர் நமக்கு உதவுவார் என்று தோன்றியதாம் அந்தப் பெண்ணுக்கு.

ஆகவே, கைகளை அகல விரித்தபடி ஓடி வந்து அவரைக் கட்டிக்கொண்டு, பின் அவர் கைகளைப் பிடித்தபடி நிலைமையை விளக்க, அவரும் புரிந்துகொண்டு அந்த பெண்ணை பாதுகாப்பாக வீடு கொண்டு சேர்த்திருக்கிறார்.

இந்த விடயத்தை அந்த நபர் ட்விட்டரில் பதிவேற்றம் செய்ய, அதை படித்த அனைவரும் அவரை, நல்ல வேலை செய்தீர்கள் என்று பாராட்டியுள்ளார்கள்.

ஒருவர் நீங்கள் ஓரு ஹீரோ என்று புகழ, மற்றொருவரோ, நீங்கள் மட்டும் இல்லையென்றால் அந்த பெண்ணின் நிலைமை என்ன வேண்டுமானாலும் ஆகியிருக்கலாம் என்கிறார் அச்சத்துடன்.

அந்த ட்வீட், 382,000 லைக்குகளையும் 60,000 ஷேர்களையும் பெற்றுள்ளதோடு, ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்து அவரை பாராட்டி வருகிறார்கள்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...