அமெரிக்க டொலர் தொடர் வீழ்ச்சியை சந்திப்பதற்கான காரணம் என்ன?

Report Print Vethu Vethu in பொருளாதாரம்
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

அமெரிக்காவின் பொருளாதார ஸ்திரத்தன்மையை நிர்ணயிக்கும் டொலரின் பெறுமதி அண்மைய காலங்களில் வீழ்ச்சியை பதிவு செய்து வருகின்றன.

கடந்த 2014-ஆம் ஆண்டு அமெரிக்கப் பொருளாதாரம் வளர்ச்சி கண்டபோது, டொலரும் வலிமை அடைந்தது.

advertisement

டொலரின் மதிப்பை அளவிடும் Dollar Index கடந்தாண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது குறைவாக உள்ளது. கடந்த வெள்ளியன்று டொலர் இன்டெக்ஸ் 92.863 என்ற அளவில் குறைவாக இருந்தது.

டொலர் சரிவை சந்திப்பதற்கான காரணங்கள் என்ன?

அமெரிக்கா தன் பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்க அளித்து வந்த சலுகைகளை நிறுத்திய பின்னரும், ஐரோப்பிய மத்திய வங்கி அதைத் தொடர்ந்தது. அதனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் நாணயமான யூரோ சரிந்தது.

தற்போது ஐரோப்பிய மத்திய வங்கியும் அவற்றை நிறுத்தத் திட்டமிடுவதால், யூரோவின் மதிப்பு அதிகரித்து, அது டொலரின் வீழ்ச்சிக்கு வழி வகுக்கிறது. தற்போது ஒரு யூரோவின் மதிப்பு 1.17 டொலரை விடவும் அதிகமாக உள்ளது.

யூரோ தவிர ஜப்பானின் யென், மெக்சிகோவின் பெசோ, ஸ்வீடனின் க்ரோனா ஆகிய நாணயங்களுக்கு எதிரான டொலரின் மதிப்பும் சரிந்து வருகிறது. பிரெக்ஸிட்டுக்குப் பிறகு வீழ்ச்சியைச் சந்தித்த ஸ்டெர்லிங் பவுண்டின் மதிப்பும் தற்போது வலுவடைந்து வருகிறது.

2016-ன் இறுதியில் டொனல்ட் டிரம்ப் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு, வரி குறைப்பு, உள்கட்டமைப்புக்காக அதிக முதலீடு ஆகிய எதிர்பார்ப்புகளால் டொலரின் மதிப்பு அதிகரித்தது. ஆனால் பதவியேற்றபின் அவர் பொருளாதாரதிற்காக பெரிதாக எதுவும் செய்யாததால் அந்த வளர்ச்சி நின்றுவிட்டது.

ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு குறித்த விசாரணை, வட கொரியாவுடன் ஏற்பட்டுள்ள மோதல் ஆகியவை அரசியல் நிலையின்மையை ஏற்படுத்தியுள்ளதால், அது முதலீட்டாளர்களின் நம்பிக்கையைக் குறைத்துள்ளது.

டிசம்பர் 2015-க்குப் பிறகு அமெரிக்க மத்திய வங்கி ஐந்து முறை வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. வரும் டிசம்பரில் மேலும் அதிகரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "எதிர்பார்த்த அளவுக்கு அமெரிக்கப் பொருளாதாரம் வளரவில்லை என்பதையே இது காட்டுகிறது என ஹார்வர்ட் பேராசிரியர் ஜெஃப்பிரி ஃபிரீடன் சுட்டிக்காட்டியுள்ளார்.

சமீபத்திய மாதங்களில் அமெரிக்கப் பங்குச் சந்தைகளில் வளர்ச்சி உள்ள போதிலும், அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசெர்வின் தலைவர் ஜேனட் எல்லனின் பதவிக்காலம் அடுத்த பிப்ரவரி மாதம் முடிகிறது. டிரம்ப் தேர்வு செய்யப்போகும் அடுத்த தலைவர் யார் என்பது குறித்த நிச்சயமற்ற சூழலும், டொலரின் சரிவுக்கு ஒரு முக்கிய காரணியாக உள்ளது.

டொலர் வலுவற்று இருப்பதையே தாம் விரும்புவதாக ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார். "கேட்க நன்றாக இருந்தாலும் டொலர் வலிமையாக இருந்தால் பல கெட்ட விடயங்களும் நடக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளில் அதிகம் வாங்கும் அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கும், நிறுவனங்களுக்கும் இது உவப்பானதல்ல. வலுவற்ற டொலர் என்றால், அவர்கள் பொருட்களை வாங்க இன்னும் கூடுதலாக செலவு செய்ய வேண்டியிருக்கும்.

ஆனால், தொழில்துறைக்கு ஆதரவான டிரம்ப் நிர்வாகம், டொலர் வலுவிழந்தால் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க விரும்புகிறது. டொலர் மதிப்பு குறைவாக இருந்தால், சர்வதேச அளவில் பிற நாடுகள் அமெரிக்காவில் இருந்து நிறைய இறக்குமதி செய்யும் என்று நம்புகிறது.

விலை உயர்ந்த வெளிநாட்டுப் பொருட்களின் வரத்து அதிகரித்து, அமெரிக்காவின் விலைவாசி மற்றும் பணவீக்கத்தை அதிகரித்தால், மத்திய வங்கியும் வட்டி விகிதத்தை அதிகரிக்கும். அத்தகைய நடவடிக்கை டாலரின் மதிப்பை அதிகரிக்கவே செய்யும் என்றே கணிக்கப்படுகிறது.

மேலும் பொருளாதாரம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்