இந்திய அணியில் இருந்து நீக்கியதற்கு பதிலடி கொடுத்த தமிழக வீரர்கள்

Report Print Kabilan in கிரிக்கெட்

தியோதர் டிராபிக்கான முதல் லீக் ஆட்டத்தில் தமிழக வீரர்களான தினேஷ் கார்த்திக் மற்றும் அஸ்வின் ஆகியோர் அரைசதம் அடித்து, அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கு பதிலடி கொடுத்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் விளையாடி வருகிறது. ஆனால் தமிழக வீரர்களான தினேஷ் கார்த்திக், அஸ்வின் ஆகியோருக்கு இந்த தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில் இவர்கள் இருவரும் இந்திய ஏ அணியில் விளையாடி வருகின்றனர். பெங்களூருவில் நடந்த தியோதர் டிராபி தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் இந்தியா ஏ அணியும், இந்தியா பி அணியும் மோதின.

முதலில் ஆடிய இந்தியா பி அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 261 ஓட்டங்கள் எடுத்தது. விஹாரி 87 ஓட்டங்களும், திவாரி 52 ஓட்டங்களும் விளாசினர்.

பின்னர் களமிறங்கிய இந்தியா ஏ அணி 46.4 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 218 ஓட்டங்களே எடுத்தது. எனினும் தினேஷ் கார்த்திக் 114 பந்துகளில் ஒரு சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 99 ஓட்டங்கள் எடுத்தார்.

ரவிச்சந்திரன் அஸ்வின் 76 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 54 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் இந்திய அணியில் இருந்து தேர்வாளர்கள் தங்களை நீக்கியதற்கு, தினேஷ் கார்த்திக் மற்றும் அஸ்வின் இருவரும் பேட்டிங் திறமையால் பதிலடி கொடுத்துள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்