ஜேர்மனியில் பிரெக்சிட்டால் பதவியிழக்கும் ஒரு மேயர்: பல்வேறு நாடுகளிலும் பிரச்சினை என்பதற்கு உதாரணம்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

பிரெக்சிட்டால் பல்வேறு நாடுகளிலுள்ளவர்களுக்கும் பிரச்னை ஏற்பட உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளன.

அவ்வகையில், ஜேர்மன் மேயர் ஒருவர் பிரெக்சிட்டால் பதவியிழக்கும் அபாயத்திற்குள்ளாகியிருப்பதாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

தான் மேயராக இருக்கும் ஜேர்மன் மாகாண நகராட்சியில் இருக்கும் தனது வீட்டில், பெருமையுடன் ஸ்காட்லாந்துக் கொடி ஒன்றைப் பறக்க விட்டுள்ளார் Iain Macnab.

மூன்று முறை மேயராக தேர்வு செய்யப்பட்ட Iain Macnab, பிரெக்சிட்டால் பதவி இழக்கவுள்ளார்.

பிரெக்சிட் நிறைவேற்றப்படும் அடுத்த நிமிடம், நான் மேயர் பதவியிலிருக்கமாட்டேன், காரணம் அந்த கணத்திலிருந்து நான் ஐரோப்பிய ஒன்றிய குடிமகன் அல்ல என்கிறார் Iain Macnab.

ஏனென்றால், பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியபின், ஜேர்மனியில், பிரித்தானியர்கள் உள்ளூர் கவுன்சிலிலோ அல்லது உள்ளூர் அரசாங்கத்திலோ எந்த பதவியும் வகிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

அக்டோபர் 31ஆம் திகதிக்குள் Iain Macnab ஜேர்மன் குடிமகன் ஆனாலொழிய, அவர் 12 ஆண்டுகளாக வகிக்கும் பதவியில் அவரால் நீடிக்க முடியாது.

ஆனால், இந்த வயதில் அதற்கெல்லாம் Iain Macnab தயாராக இல்லை. 70 ஆண்டுகளாக ஒரு ஸ்காட்லாந்துக் குடிமகனாக இருந்து விட்டேன், இனியும் அப்படியேதான் இருக்கப்போகிறேன் என்கிறார் அவர்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேற இன்னும் 10 வாரங்களே உள்ள நிலையில், Iain Macnabஇன் எதிர்காலம் கேள்விக்குறியாகவே உள்ளது.

ஜேர்மானியரான தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் ஜேர்மனியிலேயே தங்கிவிடுவதா, அல்லது ஸ்காட்லாந்துக்கு செல்வதா என்பதை அவர் இன்னும் முடிவு செய்யவில்லை.

அவர் என்ன முடிவு எடுத்தாலும், பிரெக்சிட்டால் அவரது மேயர் பதவி முடிவுக்கு வரப்போவது மட்டும் நிச்சயம்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்