ஜேர்மனி விமான நிலையத்தில் குப்பைத் தொட்டிகளை சுத்தம் செய்து கொண்டிருந்த நபர்: சந்தேகத்தில் பிடித்து விசாரித்தபோது...

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியின் பிராங்பர்ட் விமான நிலையத்தில் குப்பைத் தொட்டிகளை சுத்தம் செய்துகொண்டிருந்த பணியாளர் ஒருவர் அடையாள அட்டை அணியாததால் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

பொலிசார் அவரைப் பிடித்து விசாரித்தபோது, அவருக்கு ஜேர்மன் மொழி பேசவும் தெரியவில்லை.

பொலிஸ் நிலையம் கொண்டு சென்று தொடர்ந்து அவரிடம் விசாரித்ததில் சுவாரஸ்யவிடயம் ஒன்று வெளியானது. அந்த நபர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்.

ஜேர்மனியிலிருக்கும் தனது காதலியை சந்திக்க முடியாததால், ஜேர்மனிக்குள் எப்படியாவது நுழைந்துவிட முடிவு செய்து வாஷிங்டனிலிருந்து விமானம் ஏறி பிராங்பர்ட் வந்துள்ளார் அவர்.

விமான நிலையத்திற்குள் நுழைந்ததும், துப்புரவுப் பணியாளர்கள் அணியும் மேலாடை ஒன்றை எடுத்து அணிந்துகொண்டு, இரண்டு குப்பை சேகரிக்கும் கவர்களையும்

எடுத்துக்கொண்டு, விமான நிலையத்திற்குள் அங்கும் இங்கும் நடக்கத் துவங்கியுள்ளார்.

தன்னை உண்மையாகவே துப்புரவுப் பணியாளர் என்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகள் நம்பவேண்டும் என்பதற்காக சில குப்பைத் தொட்டிகளையும் சுத்தம் செய்துள்ளார் அவர்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர் அடையாள அட்டையும் அணியாமல் ஜேர்மன் மொழி பேசவும் தெரியாமல் இருக்கவே பாதுகாப்பு அதிகாரி ஒருவரிடம் சிக்கிக் கொண்டார். விசாரணைக்குப் பின் அவர் வாஷிங்டனுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

பாவம், காதலியை சந்திக்கும் அவரது திட்டம் நிறைவேறாமலே போய்விட, ஏமாற்றத்துடன் அமெரிக்கா திரும்பியுள்ளார் அவர்!

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்