சவுதி உள்ளிட்ட 18 நாடுகளில் வேலை செய்வோருக்கு இனி இது கட்டாயம்: வெளியான உத்தரவு

Report Print Arbin Arbin in இந்தியா

சவுதி, கட்டார் உள்ளிட்ட 18 வெளிநாடுகளில் வேலை செய்வோருக்கு இ-மைகிரேட் பதிவு கட்டாயம் என்று இந்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டார், ஐக்கிய அமீரகம், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் தமிழகத்தில் இருந்தும், கேரளாவில் இருந்தும் பல லட்சம் பேர் வேலைக்கு சென்று வருகின்றனர்.

கட்டுமான தொழில், மீன்பிடித்தல் என்று பல்வேறு தொழில்களில் ஒப்பந்த அடிப்படையில் இவர்கள் அழைத்து செல்லப்படுகின்றனர்.

இவர்கள் பண்டிகை காலங்களில் மட்டுமே ஊர் திரும்புவது வழக்கம். குடும்பம், குழந்தைகளை காணாமல் வருடக்கணக்கில் அங்கு தொழில் செய்யும் நிலையும் காணப்படுகிறது.

இந்தநிலையில் வளைகுடா நாடுகளில் தொழில் புரிகின்றவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் அவ்வப்போது விதிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் வளைகுடா நாடுகள் உட்பட 18 நாடுகளில் இந்தியாவில் இருந்து தொழில் தேடி செல்கின்றவர்களுக்கு இந்திய அரசு புதிதாக இ-மைகிரேட் என்ற பதிவை கட்டாயமாக்கியுள்ளது.

கட்டார், ஐக்கிய அமீரகம், சவுதி அரேபியா, குவைத், பஹ்ரைன், ஓமான், மலேசியா, ஈராக், ஜோர்தான், தாய்லாந்து, ஏமன், லிபியா, இந்தோனேஷியா, சூடான், ஆப்கானிஸ்தான், சவுத் சூடான், லெபனன், சிரியா ஆகிய 18 நாடுகளுக்கு புதியதாக தொழில் விசாவில் செல்கின்றவர்கள் மட்டுமல்ல தற்போது இந்த நாடுகளில் தொழில் விசாவில் பணிபுரிகின்றவர்களும் இணையம் வாயிலாக பதிவு செய்ய வேண்டும்.

வெளிநாடுகளில் இருந்தவாறே பதிவு செய்ய இயலவில்லையெனில் சொந்த ஊருக்கு திரும்பி வரும்போது பதிவு செய்யாமல் ஜனவரி 1ம் தேதி முதல் மீண்டும் திரும்ப செல்ல இயலாது என்ற கெடு விதிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக பயணம் செய்வதற்கு 21 நாட்களுக்கு முன்னர் முதல் பயணத்திற்கு முதல்நாள் வரை பதிவு செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள செல்போன் எண் வாயிலாக மட்டுமே பதிவு செய்ய முடியும். இசிஎன்ஆர் பதிவு என்று கிளிக் செய்து பதிவு செய்கின்றவர்களுக்கு செல்போன் எண் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

ஓடிபி அடிப்படையில் தொடர் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். பதிவில் சிகப்பு நட்சத்திர குறியீடுகள் கொண்டவை கட்டாயம் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

வேலைக்கு செல்வோரின் பாஸ்போர்ட் எண், இ-மெயில், கல்வி தகுதி, ஆதார் எண், செல்கின்ற நாடு, தொழில், விசா, அவசர காலத்தில் வெளிநாட்டிலும், சொந்த நாட்டிலும் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் போன்ற விபரங்களை வழங்க வேண்டியிருக்கும்.

அனைத்து விபரங்களையும் பூர்த்தி செய்து வழங்கினால் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு அதனை உறுதி செய்து தகவல் வரும்.

பாஸ்போர்ட் வைத்திருப்போர் மட்டுமே இணையதளத்தில் பதிவு செய்ய இயலும். இதற்கு கட்டணம் ஏதும் இல்லை.

புதிதாக வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புகின்ற நிறுவனம் வாயிலாக தொழில் விசாவில் வெளிநாடுகளுக்கு செல்வோர் ஏஜென்சியின் முகவரியை தெரிவிக்க வேண்டும்.

நேரடியாக வேலை கிடைத்தால் இந்த விபரத்தை பூர்த்தி செய்ய வேண்டியது இல்லை. ஆனால் தொழில் நிறுவனத்தை மாற்றிக்கொண்டால் புதியதாக பதிவு செய்ய வேண்டும்.

ஏற்கனவே இசிஆர் பாஸ்போர்ட் வைத்திருந்தவர் மூன்று வருடங்களுக்கு மேல் வெளிநாடுகளில் வசித்தாலோ, அவர் வருமான வரி செலுத்துவோராகவோ இருந்தால் இசிஎன்ஆர் பிரிவில் மாற்றப்படுவர்.

இவ்வாறு இசிஎன்ஆர் பிரிவில் மாறியவர்களும் இ-மைகிரேட் வெப்சைட் வழியாக பதிவு செய்ய வேண்டும்.

சுற்றுலா, பிசினஸ், ஆன்மிக பயணம் போன்றவற்றுக்கான விசாக்களில் இந்த 18 நாடுகளில் செல்கின்றவர்களுக்கு பதிவு கட்டாயம் இல்லை.

குடும்ப விசாவில் வெளிநாடுகளில் தொழில் செய்கின்றவர்களுக்கும் பதிவு தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்