அப்போதே தமிழகத்தில் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம்..!

Report Print Kabilan in இந்தியா

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ப.சிதம்பரம், ஏற்கனவே ஒருமுறை தமிழகத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்திருக்கிறார்.

தனது தந்தை ப.சிதம்பரத்தின் உதவியுடன், ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தில் கார்த்தி சிதம்பரம் ரூ.305 கோடி முறைகேடு செய்ததாகக் கூறி கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், அவரது தந்தை ப.சிதம்பரத்துக்கும் முறைகேட்டில் தொடர்புள்ளதாக கூறி சி.பி.ஐ அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள சி.பி.ஐ தலைமை அலுவலகத்தில் அவரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன் ப.சிதம்பரம் தமிழகத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

கடந்த 1989ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் இருந்தபோது, மறைமலைநகர் ரயில் நிலையத்திற்கு காமராஜர் பெயரை சூட்ட வேண்டும் என்று, காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர்.

பல்வேறு பகுதிகளிலும் இந்த போராட்டம் நடந்த நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஜி.கே.மூப்பனார், கராத்தே தியாகராஜன் ஆகியோருடன் ப.சிதம்பரமும் போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது இவர்கள் அனைவரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். சனிக்கிழமையன்று இந்த கைது சம்பவம் நடந்ததால், உடனடியாக ஜாமீன் கிடைக்கவில்லை. அதனைத் தொடர்ந்து, ப.சிதம்பரம் தரப்பில் இருந்து கைதானவர்களை விடுவிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதன் பின்னர் ஞாயிற்றுக்கிழமை மதியம், நீதிபதி வீட்டில் விசாரணை நடத்தப்பட்டு ப.சிதம்பரம் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டனர். இது தான் ப.சிதம்பரத்தின் முதல் கைது. அதன் பின்னர், 30 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இரண்டாவது முறையாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்