காதலியை கொன்றுவிட்டு நாடகமாடிய காதலன்: காட்டிக் கொடுத்த சிறு தடயம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

தனது காதலியைக் கொன்றுவிட்டு, அவள் தற்கொலை செய்துகொண்டதுபோல் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு மாயமான காதலன், கடிதத்தில் செய்த ஒரு சிறு தவறு காட்டிக் கொடுத்ததால் சிக்கினார்.

பிரித்தானியாவைச் சேர்ந்த நாடின் அபுராஸ் (28) என்னும் இளம்பெண், இணையத்தில் சந்தித்த சாமி என்னும் அமெரிக்கரை காதலித்து வந்தார்.

இந்நிலையில் ஒருநாள் வேல்ஸிலுள்ள ஹொட்டல் அறை ஒன்றில் பிணமாகக் கிடந்தார் நாடின்.

பொலிசார் வந்து பார்த்தபோது நாடினின் உடலுக்கருகே ஒரு கடிதம் கிடந்தது. அதில், என் காதலே சாமி, வருந்துகிறேன் என்று எழுதப்பட்டிருந்தது.

அதாவது நாடின் தற்கொலை செய்து இறந்தது போன்ற ஒரு தோற்றம் காணப்பட்டது. ஆனால் துப்பறிவாளர்கள் அந்த கடிதத்தில் ஒரு முக்கியமான விடயத்தைக் கண்டு பிடித்தார்கள்.

அந்த சிறு விடயம், என்ன நடந்தது என்பதை யூகிக்கச் செய்து, பின்னர் அது தற்கொலை அல்ல, கொலை என்பதைக் காட்டிக் கொடுத்து, கொலையாளியையும் சிக்க வைத்தது.

அது என்ன விடயம் தெரியுமா? அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த திகதிதான் அது! இந்த சம்பவம் நடைபெற்றது 2014ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 29ஆம் திகதி. நாடின் எழுதி வைத்ததாக தோற்றமளித்த அந்த தற்கொலைக் குறிப்பில் 12/29/14 என்று திகதியிடப்பட்டிருந்தது.

அதாவது அமெரிக்கர்கள்தான் இப்படி மாதத்தை முதலிலும், திகதியை இரண்டாவதும் போடுவார்கள்.

ஆனால் நாடினோ ஒரு பிரித்தானியர், அவர் அந்த கடிதத்தை எழுதியிருந்தால், 29/12/14 என்றுதான் திகதியிட்டிருக்க வேண்டும்.

எனவே இந்த சம்பவம் ஒரு தற்கொலையல்ல, அது ஒரு கொலை கொலையாளி ஒரு அமெரிக்கர் என்ற கோணத்தில் துவங்கிய விசாரணை, சாமியை நோக்கி கைகாட்டியது.

கொலை நிகழ்ந்து மூன்று வாரங்களுக்குப்பின், சாம்பியா நாட்டு எல்லைக்கருகில் பிடிபட்டார் சாமி.

விசாரணையில், ஒன்லைனில் நாடினை சந்தித்த சாமி, தான் ஒரு கோடீஸ்வரர் என்று கூறி அவரை ஏமாற்றியிருந்ததோடு, பல விலை மதிப்பற்ற பரிசுகளையும் அவருக்கு அனுப்பி நம்ப வைத்துள்ளார்.

வேல்ஸுக்கு வந்து நாடினின் குடும்பத்தையும் அவர் சந்தித்துள்ளார். ஆனால் ஒரு முறை நாடின் சாமியைத் தேடி அமெரிக்கா செல்ல, அவர் ஒரு கோடீஸ்வரர் அல்ல, மாறாக ஒரு டாக்சி ஓட்டுநர் என்பது தெரியவர அதிர்ந்து போயுள்ளார் நாடின்.

சாமியுடன் வாக்குவாதம் செய்து, பலனாக உடலில் காயங்களுடன் வீடு திரும்பிய நாடின், சாமியுடனான உறவை முறித்துக் கொள்ள முடிவு செய்து பொலிசாரிடம் பாலியல் புகாரளித்துள்ளார்.

ஆத்திரமுற்ற சாமி, நாடினின் நிர்வாண படங்களை வெளியிட்டுவிடுவதாகவும், தான் பொருத்தியுள்ள ரகசிய கமெராக்கள் உதவியுடன் நாடினை கண்காணித்து வருவதாகவும் மிரட்டி இருக்கிறார்.

பின்னர், மீண்டும் லண்டன் வந்த சாமி, தான் நாடினின் நிர்வாணப்படங்களை திருப்பிக் கொடுத்து விடுவதாகக் கூறி நாடினை சந்திக்க, அவரது சகோதரர்கள் அவரைப் பிடித்து ரயில் நிலையத்தில் விட்டு, ஊருக்கு ஓடிப்போய்விடு என்று எச்சரித்துவிட்டு வந்திருக்கிறார்கள்.

ஆனால் அமெரிக்கா செல்லாமல் மீண்டும் லண்டன் திரும்பிய சாமி, நாடினை தொடர்பு கொண்டு தனது பாஸ்போர்ட் அவரது அறையிலேயே இருப்பதாகவும், அதைக் கொண்டு தருமாறும் கூறி நாடினை வரவழைத்திருக்கிறார்.

தேடி வந்த நாடினை, கழுத்தை நெறித்துக் கொலை செய்து, அவரை குளிப்பாட்டி, உடை உடுத்தி கட்டிலில் படுக்க வைத்துவிட்டு, கடிதம் ஒன்றை நாடின் எழுதி வைத்தது போல் எழுதி வைத்து விட்டு, தப்பியிருக்கிறார் சாமி.

அவர் லண்டனுக்கு வந்தது, வெளியேறியது என அனைத்துக் காட்சிகளும் ஹொட்டல் CCTV கமெராக்களில் பதிவாகியிருக்க, பொலிசார் சாமியைத் துரத்த, அவர் நாடு நாடாக தப்பி கடைசியாக தான்சானியாவுக்கு சென்று பதுங்க, சர்வதேச பொலிசார் உதவியுடன் அவரைப் பிடித்து பிரித்தானியாவுக்கு கொண்டு வந்தனர் பொலிசார்.

சாமிக்கு 17 ஆண்டுகளுக்கு ஜாமீனில் வர இயலாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இப்படியாக குற்றவாளி செய்த ஒரு சிறு பிழை, முக்கிய தடயமாக உதவி பெரிய வழக்கு ஒன்றை வெற்றிகரமாக முடிக்க உதவியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்