மறுசுழற்சி செய்யப்பட்ட கழிவுப்பொருள் கண்டெய்னர்களில் அபாயகரமான பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இங்கிலாந்துக்கு திருப்பி அனுப்புவதாக இலங்கை தெரிவித்துள்ளது.
ஒரு தனியார் நிறுவனத்தால் 2017 ஆம் ஆண்டில் இறக்குமதி செய்யப்பட்ட 263 கொள்கலன்களில் பெரும்பாலானவற்றில் மருத்துவமனை கழிவுகள், பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் உள்ளிட்டவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி, பெரும்பாலான கொள்கலன்கள் கிடங்குகளில் சேமிக்கப்பட்டுள்ளன, ஒரு சிறிய அளவு பொருட்கள் மட்டுமே மீண்டும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
2018 ஆம் ஆண்டில் இலங்கை அதிகாரிகள் இந்த பொருளை கைப்பற்றிய பின்னர் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மொத்தம் 21 கொள்கலன்கள் சனிக்கிழமையன்று இலங்கையிலிருந்து புறப்பட்டதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
சுங்க இலாகா செய்தித் தொடர்பாளர் சுனில் ஜெயரத்ன கூறுகையில், உண்மையில் இந்த இறக்குமதியானது சர்வதேச மற்றும் ஐரோப்பிய ஒன்றிய விதிகள் மற்றும் அபாயகரமான கழிவுகள் மற்றும் அதை அகற்றுவது தொடர்பான விதிமுறைகளை மீறியது என்றார்.
இப்பகுதியில் உள்ள பல நாடுகள் சமீபத்தில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கழிவுகளை திருப்பி அனுப்பத் தொடங்கியுள்ளன.
கடந்த ஜனவரி மாதம், சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளின் 42 கப்பல் கொள்கலன்களை மலேசியா இங்கிலாந்துக்கு திருப்பி அனுப்பியது குறிப்பிடத்தக்கது.