சிக்கனத்தை கடைப்பிடிக்கும் விருச்சிக ராசியினரே! குருபெயர்ச்சி பலன்கள்

Report Print Fathima Fathima in ஜோதிடம்
0Shares
0Shares
lankasrimarket.com

ஏணிப்படியாக இருந்து மற்றவர்களை ஏற்றுவதுடன், தானும் வாழ்வின் உயர்ந்த அந்தஸ்தைப் பிடிக்கும் நீங்கள், எப்பொழுதுமே சுற்றி இருப்பவர்களின் நலனை மனதில் கொண்டு செயல்படுபவர் நீங்கள்.

இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்துகொண்டு தொட்ட காரியங்களையெல்லாம் துலங்க வைத்ததுடன், பணம், பதவி, செல்வாக்கை அள்ளித் தந்த குரு பகவான் இப்போது 02.09.2017 முதல் 02.10.2018 வரை உங்களின் விரய வீடான 12ம் வீட்டிலேயே அமர்வதால் சவால்களை சந்திக்க வேண்டி வரும்.

உங்களுடைய அணுகுமுறையை மாற்றுவது நல்லது. மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்காதீர்கள். உங்களின் தனித்தன்மையை பின்பற்றுவது நல்லது. சொந்த ஊரில் வாங்கியிருந்த இடத்தை கட்டுவதற்கான முயற்சியில் இறங்குவீர்கள்.

குருபகவானின் பார்வை

குருபகவான் தனது 5ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 4ம் வீட்டைப் பார்ப்பதால் எவ்வளவு நெருக்கடிகள் வந்தாலும் அவற்றையெல்லாம் சளைக்காமல் சமாளிக்கும் சக்தி கிடைக்கும். தாயாரின் ஆரோக்யம் சீராகும். உங்கள் ராசிக்கு 6ம் வீட்டை குரு தனது 7ம் பார்வையால் பார்ப்பதால் எடுத்த வேலைகளை முடிக்காமல் ஓயமாட்டீர்கள்.

அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அதிக வட்டிக் கடனை குறைந்த வட்டிக்கு பணம் வாங்கி பைசல் செய்வீர்கள். நீண்ட நாளாக எதிர்பார்த்து காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாகும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும்.

வெளிவட்டாரத்தில் சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். குருபகவான் தனது 9ம் பார்வையால் உங்களின் 8ம் வீட்டைப் பார்ப்பதால் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகன் பொறுப்பாக நடந்து கொள்வார்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்

உங்கள் ராசிநாதனும்சஷ்டமாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3, 4ம் பாதம் துலாம் ராசியில் 02.09.2017 முதல் 05.10.2017 வரை குருபகவான் செல்வதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள்.

அழகு, இளமைக் கூடும். பேச்சில் கம்பீரம் தெரியும். குடும்ப வருமானத்தை உயர்த்துவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமலிருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள். சகோதர, சகோதரிகள் உங்கள் வளர்ச்சிக்கு பக்கபலமாக இருப்பார்கள்.

06.10.2017 முதல் 07.12.2017 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் மனோபலம் அதிகரிக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். நிலுவையிலிருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.

அயல்நாட்டிற்குச் செல்ல விசா கிடைக்கும். மனைவியின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றுவீர்கள். உங்களின் தனபூர்வ புண்யாதிபதியான குருபகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1, 2, 3ம் பாதம் துலாம் ராசியிலேயே 08.12.2017 முதல் 13.02.2018 மற்றும் 04.07.2018 முதல் 02.10.2018 வரை பயணிப்பதால் இக்காலக்கட்டத்தில் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

குருபகவானின் அதிசார வக்ர சஞ்சாரம்

14.02.2018 முதல் 10.04.2018 வரை விசாகம் நட்சத்திரம் 4ம் பாதத்தில் அதிசார வக்ரத்தில் உங்கள் ராசிக்கு 8ம் வீட்டில் குருபகவான் சென்று மறைவதால் யாரிடமாவது சண்டைபோட வேண்டும் என யோசிக்க வைக்கும். உங்களைப் பற்றி தவறாக எப்போதோ எங்கேயோ யாரோ சொன்னதெல்லாம் இப்போது நினைவிற்கு வந்து புலம்புவீர்கள். சாப்பாட்டில் உப்பை குறையுங்கள். முடிந்த வரை குறைத்து சாப்பிடுவது நல்லது.

ஒரே வேலையில் அதிக உணவு எடுத்துக் கொள்ள வேண்டாம். டீ, காபியையும் குறைத்துக் கொள்ளுங்கள். நெஞ்சு படபடப்பு, தலைச்சுற்றல், கை, கால் மரத்துப் போகுதல் வந்து நீங்கும். லாகிரி வஸ்துக்களை தவிர்ப்பது நல்லது. உங்கள் இயல்புக்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம்.

குடும்பத்தில், கணவன் மனைவிக்குள் பிரிவுகள் ஏற்படக் கூடும் பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நல்லது. கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்

07.03.2018 முதல் 03.07.2018 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குருபகவான் வக்ர கதியில் செல்வதால் இக்கால கட்டத்தில் வாழ்க்கையின் சூட்சுமத்தை உணருவீர்கள். கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். பெரிய பதவி, பொறுப்புகளுக்கு உங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும்.

ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். இளைய சகோதரியின் திருமணத்தை நடத்துவீர்கள். பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் கொடுத்த வாக்குறுதியை கடைசி நேரத்தில் நிறைவேற்றிவிடுவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். மகான்கள், சித்தர்களை சந்தித்து ஆசிப் பெறுவீர்கள். அடகிலிருந்த நகை, பத்திரங்களை மீட்பீர்கள்.

வியாபாரிகளே! சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். போட்டிகளை சமாளிக்க புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். வேலையாட்களிடம் அதிக கண்டிப்பு காட்டாதீர்கள். விளம்பர யுக்திகளாலும், தள்ளுபடி அறிவிப்பாலும் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள்.

வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த முடியாமல் திணறுவீர்கள். கடன் வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்தி, அழகுப்படுத்துவீர்கள். பழைய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலியுங்கள். டிராவல்ஸ், உரம், கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் மற்றும் ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். இடைத்தரகர்களை நம்பி புது வியாபாரத்தில் நுழைய வேண்டாம். வேற்றுமாநிலம், வெளிநாட்டிலிருப்பவர்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். பங்குதாரர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போங்கள்.

உத்யோகஸ்தர்களே! பொறுப்புகள் அதிகரிக்கும். மற்றவர்களின் வேலையையும் இழுத்துப் போட்டு செய்வீர்கள். மூத்த அதிகாரிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள உங்கள் மீது பழி சுமத்துவார்கள். கவனமாக இருங்கள். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். சம்பள உயர்வு உண்டு. சிலருக்கு வெளிமாநிலத்தில் அல்லது அயல்நாட்டில் வேலை அமையும்.

கன்னிப் பெண்களே! அண்டைமாநிலம், அயல்நாட்டில் உத்யோகம் கிடைக்கும். புதிதாக அறிமுகமாகுபவர்களிடம் கொஞ்சம் தள்ளியிருங்கள். பெற்றோரின் ஆலோசனைகள் இப்போது கசப்பாக இருந்தாலும் பின்னர் அது சரியானது தான் என்பதை நீங்கள் உணர்வீர்கள்.

மாணவ மாணவிகளே! உடன்படிக்கும் நண்பர்கள் உங்களை விட அதிக மதிப்பெண்ணை பெற்று உங்களை தலைகுனிய வைப்பார்கள். கவனம் தேவை. தெரியாதவற்றை ஆசிரியரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். கேள்விக்கு விடை எழுதும் போது முக்கிய கீ ஆன்சரை மறந்துவிடாதீர்கள். நல்லவர்களின் நட்பை வளர்த்துக் கொள்ளுங்கள். ஆய்வகப் பரிசோதனையின் போது கண்ணிலோ, கையிலோ ஆசிட் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

கலைத்துறையினரே! உங்களின் படைப்புகளை ரகசியமாக வையுங்கள். எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். மூத்த கலைஞர்களின் நட்பால் ஆதாயமடைவீர்கள். உங்களுடைய கற்பனை திறன் வளரும்.

அரசியல்வாதிகளே! உங்கள் குடும்ப பிரச்னைகள் வெளியில் உள்ளவர்களுக்கு தெரியாத வகையில் அதை தீர்த்துக் கொள்ளப் பாருங்கள். கட்சியில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். தொகுதி மக்களை பணிவாக அணுகுங்கள்.

விவசாயிகளே! வாய்க்கால், வரப்புச் சண்டைக்கு சுமுக தீர்வு காண்பது நல்லது. வங்கிக் கடன் கிடைத்து அடகு வைத்திருந்த பத்திரத்தை மீட்பீர்கள். டிராக்டர், களப்பையெல்லாம் புதிதாக வாங்குவீர்கள். இந்த குரு மாற்றம் உங்களை கொஞ்சம் செம்மைப்படுத்துவதற்கு உதவுவதுடன், போராட்டங்களை கடக்கும் மன உறுதியையும் தருவதாக அமையும்.

- Dina Karan

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்