புலம்பெயர்வோருக்கெதிரான கனடாவின் ரகசிய யுத்தம் : வெளிவராத ஒரு உண்மைக்கதை!

Report Print Balamanuvelan in கனடா

2009 மற்றும் 2010இல் the Ocean Lady மற்றும் the MV Sun Sea என்னும் இரண்டு படகுகள் இலங்கையிலிருந்து நூற்றுக்கணக்கான தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை சுமந்து கொண்டு கனடாவை வந்தடைந்தன.

அப்போது பிரதமராக இருந்த Stephen Harper, சட்ட விரோத புலம்பெயர்ந்தோரை சுமந்து வரும் மற்ற கப்பல்களை தடுக்க என்ன வேண்டுமானாலும் செய்வேன் என சூளுரைத்தார்.

அப்படி புலம்பெயர்வோரை தடுக்க Harper என்ன யுக்தியை பயன்படுத்தினாரோ, அதே யுக்தியைத்தான் தற்போது ஜஸ்டின் ட்ரூடோவின் அரசும் தொடர்கிறது, ஆண்டொன்றிற்கு சுமார் 18 மில்லியன் டொலர்கள் செலவில் என்கிறார்கள் பெயர் வெளியிட விரும்பாத ஃபெடரல் அலுவலர்கள் சிலர்.

பல ஆண்டுகளாக புலம்பெயர்வோரை நாட்டுக்குள் வர விடாமல் தடுப்பதற்காக கனடா ரகசியமாக வெளிநாடுகளில் பல ஆண்டுகளாக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்த உண்மைகளை வெளியிட சில ஃபெடரல் அலுவலர்கள் ஒப்புக்கொண்டனர்.

ராபர்ட் என்னும் முன்னாள் அலுவலர், Harper அரசு புலம்பெயர்வோரை சுமந்து வரும் படகுகளை கனடாவுக்குள் வர விடாமல் தடுப்பதற்காக மேற்கொண்ட பிரமாண்ட திட்டத்தை கவனித்து வந்திருக்கிறார்.

கனடா புலம்பெயர்வோரை தடுப்பதற்காக மிக மோசமான குற்றங்களில் ஈடுபட்டு வந்த ஒரு ராணுவ அதிகாரியுடன் கை கோர்த்து பணியாற்றியதை தன்னால் ஜீரணிக்க இயலவில்லை என்கிறார்.

கினியா நாட்டின் கர்னல் Moussa Tiégboro Camara என்னும் நபர் அந்நாட்டின் போதை மருந்து கடத்தல், திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் தீவிரவாதத்திற்கெதிராக போராடும் முக்கிய நபர்.

கர்னல் Moussa உட்பட, இந்தோனேஷியா, தாய்லாந்து, மலேசியா, கானா, டோகோ, பெனின் மற்றும் கினியா ஆகிய நாடுகளில் குழுக்களை நியமித்து புலம்பெயர்வோரை கடத்துபவர்களின் முயற்சிகளை முளையிலேயே கிள்ளியெறியும் நடவடிக்கைகளில் Harper அரசு ஈடுபட்டிருக்கிறது.

கனடா பொலிசார், எல்லை பாதுகாப்பு படை, உளவுத்துறை உட்பட பல அமைப்புகளை சேர்ந்தவர்கள் இந்த குழுக்களில் பங்கு வகித்திருக்கிறார்கள்.

அரசின் வெளியுறவு அமைச்சகம் முதல், புலம்பெயர்தல் துறை வரை பல அமைச்சகங்களும் அவர்களுக்கு உதவியாக இருந்திருக்கின்றன.

இன்று வரை ட்ரூடோ அரசும் அயல் நாட்டிலுள்ள உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து மனித கடத்தல் நிகழ்வுகளை செயல்படாமல் செய்யும் வகையில் செயல்பட்டு வருகின்றது, அதாவது வேறு நாடுகளை சேர்ந்த அகதிகளை நாட்டுக்குள் வர விடாமல் தடுக்கின்றது.

கனேடிய பொலிஸ் அதிகாரிகளை பொருத்தவரையில், வெளி நாடுகளில் தேடுதல் வேட்டை நிகழ்த்தவோ, கைது செய்யவோ அவர்களுக்கு அனுமதி இல்லாததால், அவர்கள் அந்தந்த நாட்டிலுள்ள அதிகாரிகளின் உதவியுடன் மனிதர்களை கடத்துவோரை கைது செய்கிறார்கள் அல்லது புலம்பெயர்வோரை தடுக்கிறார்கள்.

இன்னமும் கர்னல் Moussaவுடன் இணைந்து கனடா செயல்படுகிறதா என்பதை கூற ட்ரூடோ அரசு மறுப்பதோடு, வெளியுறவு அமைச்சர் Chrystia Freelandம் இதுகுறித்து பேச மறுக்கிறார்.

அதேபோல் இதுவரை எத்தனை பேர் வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டுள்ளார்கள், குற்றம் சாட்டப்பட்டுள்ளார்கள், தண்டிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை கூறவும் ட்ரூடோ அரசு மறுக்கிறது.

இதுவரை, இரண்டு படகுகள் மட்டுமே இடை மறிக்கப்பட்டதாகவும், ஐந்து கடத்தல்காரர்கள் மீது மட்டுமே குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், அதற்காக கனடாவுக்கான மனித கடத்தல் மற்றும் சட்ட விரோத புலம்பெயர்தலுக்கான சிறப்பு ஆலோசகரான Ward Elcock என்பவர் பொறுப்பிலிருக்கும்போது 75 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது என்பதையும் ட்ரூடோவின் அரசால் 46 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதையும் அறியும்போது இந்த சிறிய நடவடிகைகளுக்காகவா இவ்வளவு பெரிய தொகை செலவிடப்பட்டிருக்கிறது என்ற கேள்வி எழுகிறது.

Elcockஓ, புலம்பெயர்வோர் கடத்தல் சம்பவங்கள் நிகழ்வதற்கு முன்னமே, அவற்றை தடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கிறார்.

2011க்கும் 2017க்கும் இடையில் புலம்பெயர்வோருக்கான மனித உரிமைகள் குறித்து ஐக்கிய நாடுகளுக்காக சிறப்பு செய்திகள் சேகரிக்கும் பணியிலிருந்த François Crépeau என்பவர் இந்த பிரச்சினை குறித்து கூறும்போது கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா போன்ற நாடுகளின் போலித்தனம் தன்னை கோபமூட்டுவதாக தெரிவிக்கிறார்.

எங்கள் எல்லையை வந்தடைந்து விட்டால் அகதிகளை வரவேற்போம், ஆனால் எங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி எங்கள் எல்லையை அவர்கள் அடைய விடாமல் தடுப்பதற்கு என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்பதுதான் இவர்களின் தாரக மந்திரம் என்று கூறும் Crépeau, அதை எந்த நாடுகளில் மனித உரிமைகளுக்கு உததரவாதம் இல்லையோ, அந்த நாடுகளில் உள்ள பாதுகாப்பு படையினருக்கு நிதியுதவி, ஆயுத உதவி, பயிற்சி என எந்த உதவியும் செய்து தங்கள் காரியத்தை நிறைவேற்றிக்கொள்வார்கள் என்கிறார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்