பிரதமர் வேட்பாளரின் சீக்கிய தலைப்பாகையை அகற்றும்படி கூறிய நபர்: அதற்கு அவரது பதில்!

Report Print Balamanuvelan in கனடா

பிரதமர் வேட்பாளரான ஜக்மீத் சிங்கின் சீக்கிய தலைப்பாகையை அகற்றும்படி ஒருவர் ஆலோசனை கூற, அதற்கு அவர் பதிலளிக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

வரும் 21ஆம் திகதி கனடாவில் பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், பிரதமர் வேட்பாளர்களில் ஒருவரான ஜக்மீத் சிங்கிடம் அவரது தலைப்பாகையை அகற்றும்படி ஒருவர் ஆலோசனை கூறியுள்ளார்.

நீங்கள் உங்கள் தலைப்பாகையை அகற்றிவிட்டால் இன்னும் அதிகமாக ஒரு கனேடியரைப்போலவே இருப்பீர்கள் என்று அவர் ஜக்மீத் சிங்கின் காதருகே சென்று ரகசியமாகக் கூற, அதற்கு ஜக்மீத் சிங், கனேடியர்கள் என்பவர்கள் எல்லாவகை மக்களைப் போலவும் இருப்பார்கள் என்கிறார்.

மீண்டும் அந்த நபர், நீங்கள் ரோமிலிருக்கும்போது ரோமர்கள் என்ன செய்வார்களோ அதைத்தான் செய்ய வேண்டும் என்று கூற, தனது கருத்தை மீண்டும் வலியுறுத்தும் சிங், இது கனடா, கனடாவில் நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்கிறார்.

சரி, உடல் நலத்தை கவனித்துக்கொள்ளுங்கள், நீங்கள் வெற்றிபெறுவீர்கள் என்று நம்புகிறேன் என்று அவர் கூற, அவரிடம் விடைபெற்றுக்கொள்கிறார் சிங்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து பேசிய சிங், நாம் வெற்றி பெறவேண்டுமானால், நாம் நம்மை மாற்றிக்கொள்ளவேண்டும் என்று பலரும் கூறுகிறார்கள்.

உங்களுக்கு என்னுடைய செய்தி இதுதான்: நீங்கள் நீங்களாகவே இருங்கள்! என்றார். கனேடிய நாடாளுமன்றத்தில் ஜக்மீத் சிங் பெரிய அரசியல் கட்சி ஒன்றின் (the New Democratic Party) வெள்ளையரல்லாத முதல் தலைவராவார்.

என்றாலும் அவரும் இனவெறி தாக்குதலுக்கு தப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்