எனக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறது... அறிவித்த பயணியால் விமானத்தில் பரபரப்பு : பின்னர் தெரியவந்த உண்மை!

Report Print Balamanuvelan in கனடா

கனடாவிலிருந்து ஜமைக்கா புறப்பட்ட விமானம் ஒன்றிலிருந்த பயணி ஒருவர் தனக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக அறிவித்ததையடுத்து விமான பயணிகளிடையே பரபரப்பு தொற்றிக்கொண்டது.

ரொரன்றோவிலிருந்து புறப்பட்ட விமானம் ஒன்று ஜமைக்கா நோக்கி பறந்துகொண்டிருக்கும் நேரத்தில், திடீரென ஒரு பயணி எழுந்தார். எனக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறது, நான் சமீபத்தில்தான் சீனா சென்று திரும்பினேன் என்று அவர் கூற, மக்கள் பதற்றமடைந்துள்ளனர்.

உடனடியாக இந்த தகவல் விமானத்தின் பைலட்டுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனே பணிப்பெண்கள் அவருக்கு மாஸ்க் மற்றும் கையுறைகளைக் கொடுத்து விமானத்தின் கடைசி இருக்கையில் அமர வைத்துள்ளனர். அத்துடன், பைலட் விமானத்தை ரொரன்றோவுக்கே திருப்பியுள்ளார்.

விமானம் அமெரிக்காவின் ப்ளோரிடா மீது பறந்துகொண்டிருக்க, இன்னும் சற்று நேரத்தில் ஜமைக்கா சென்றடைந்துவிடுவோம் என்று எண்ணிக்கொண்டிருந்த மக்கள், விமானம் மீண்டும் ரொரன்றோ நோக்கி திரும்பியதை அறிந்து குழப்பமும் கவலையும் அடைந்துள்ளனர்.

அந்த குறிப்பிட்ட பயணி, சற்று முன் வரை செல்பி எடுத்துக்கொண்டிருந்ததை சக பயணிகள் கவனித்துள்ளனர். அத்துடன் பைலட்டும் அந்த பயணி போலியாக தனக்கு கொரோனா தொற்று இருப்பதாக கூறியுள்ளார் என்பதை கண்டுபிடிக்க, உடனடியாக விமான நிலைய பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்.

விமானம் தரையிறங்கியதும் Thornhillஐச் சேர்ந்த அந்த 29 நபர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் 243 பேருடன் புறப்பட்ட அந்த விமானம் தாமதமானதோடு, அடுத்து புறப்பட இருந்த விமானங்களும் ரத்து செய்யப்படுள்ளன.

அந்த நபர் குறும்பு செய்வதற்காக இப்படி செய்ததை அறிந்த பயணிகள் கடும் கோபமடைந்தனர். விமான நிறுவனம் பயணிகளிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது. புரளி கிளப்பியதாக அந்த நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், மார்ச் மாதம் 9ஆம் திகதி அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட இருக்கிறார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers