கொரோனா தடுப்பூசி தொடர்பில் இன்னொரு ஒப்பந்தமும் மேற்கொண்டுள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்று அறிவித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்றில் இருந்து கனேடியர்களை பாதுகாக்க மில்லியன் கணக்கிலான தடுப்பூசி டோஸ்களை வாங்கும் திட்டத்தின் ஒருபகுதியாக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் ட்ரூடோ குறிப்பிட்டுள்ளார்.
கியூபெக் நகர பயோடெக் நிறுவனமான Medicago-விடம் இருந்து கனடா அரசாங்கம் பொதுமக்கள் நலன் கருதி 76 மில்லியன் டோஸ்களை வாங்க திட்டமிட்டுள்ளதாக ட்ரூடோ அறிவித்துள்ளார்.
பிரித்தானிய நிறுவனம் ஒன்றுடன் இணைந்து Medicago நிறுவனம் கொரோனா தடுப்பூசி ஒன்றை தயாரித்து வருகிறது.
இதுவரையான சோதனைகளில் நல்ல பலனை அளித்துள்ளதாகவும் அந்த இரு நிறுவனங்களும் அறிவித்துள்ளன.
மேலும், இறுதிகட்ட சோதனையிலும் எதிர்பார்த்த பலனை அடைந்தால், 2021 மத்தியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான கொரோனா தடுப்பூசியை தங்களால் உருவாக்க முடியும் என இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.
கொரோனா தடுப்பூசி உருவாக்கும் திட்டத்தில் Medicago நிறுவனத்திற்கு பெடரல் அரசாங்கம் 173 மில்லியன் டொலர்கள் வரை நிதியுதவி அளித்துள்ளது.
மட்டுமின்றி வான்கூவர் பகுதியில் செயல்பட்டுவரும் ஒரு மருந்து நிறுவனத்திற்கும் சுமார் 18.2 மில்லியன் டொலர் அளவுக்கு நிதியுதவி அளித்துள்ளதாக பிரதமர் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
இதுவரை கனேடிய அரசாங்கம் 358 மில்லியன் டோஸ்களை பெறுவதற்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.