மேற்கிந்திய தீவுகளை அடித்து நொறுக்கிய வங்கதேசம்! 508 ஓட்டங்கள் குவிப்பு

Report Print Kabilan in கிரிக்கெட்

டாக்காவில் நடைபெற்று வரும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 508 ஓட்டங்கள் குவித்துள்ளது.

வங்கதேசம்-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி டாக்காவில் தொடங்கியது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற வங்கதேச அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

அதன்படி தொடக்க வீரர்களாக ஷத்மான் இஸ்லாம், சவுமியா சர்கார் இருவரும் களமிறங்கினர். சவுமியா சர்கார் 19 ஓட்டங்களில் ரோஸ்டன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வந்த மொமினுல் ஹக் 29 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.

இதற்கிடையில் ஷத்மான் அரைசதம் அடித்தார். பின்னர் களமிறங்கிய மிதுன் 29 ஓட்டங்களிலும், அரைசதம் கடந்த ஷத்மான் 76 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

அணித்தலைவர் ஷகிப் அல் ஹசன் 80 ஓட்டங்கள் குவித்து அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து வந்த வீரர்களும் தங்களது பங்குக்கு ஓட்டங்களை சேர்த்தனர். இதனால் வங்கதேச அணியின் ஸ்கோர் உயர்ந்தது.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் நிதானமாக ஆடிய மஹ்மதுல்லா சதம் விளாசினார். அவருக்கு பக்க பலமாக விளையாடிய லிதன் தாஸ் 54 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார்.

இறுதிவரை களத்தில் இருந்த மஹ்மதுல்லா, 242 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 136 ஓட்டங்கள் குவித்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். வங்கதேச அணி 154 ஓவர்களில் 508 ஓட்டங்கள் குவித்தது.

மேற்கிந்திய தீவுகள் அணித்தரப்பில் கேமர் ரோச், வாரிகன், பிஷூ மற்றும் பிராத்வெயிட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். பின்னர் மேற்கிந்திய தீவுகள் அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது.

இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட் இழப்புக்கு 75 ஓட்டங்கள் எடுத்துள்ளது. ஹேட்மயர் 32 ஓட்டங்களுடனும், டௌரிச் 17 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்