2017ஆம் ஆண்டில் டொலர்களைக் குவித்த பணக்காரர்கள்

Report Print Arbin Arbin in தொழிலதிபர்
160Shares
160Shares
ibctamil.com

உலகின் மாபெரும் பணக்காரர்கள் 2017ஆம் ஆண்டில் மட்டும் மொத்தம் 1 லட்சம் கோடி டொலருக்கு மேலாகச் சொத்து சேர்த்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

பங்குச் சந்தை மதிப்பு அடிப்படையிலான இந்தச் சொத்து மதிப்பு உயர்வில் 2016ஆம் ஆண்டைவிட நான்கு மடங்கு அதிகமான அளவில் இவர்கள் சொத்து சேர்த்துள்ளதாக புளூம்பெர்க் அறிக்கை கூறுகிறது.

உலகின் மிகப்பெரும் 500 பணக்காரர்களின் தினசரி சொத்து மதிப்பு உயர்வை புளூம்பெர்க் கணக்கிட்டு வருகிறது.

அந்த வகையில், இந்த 500 பணக்காரர்களும் 2017ஆம் ஆண்டில் தினசரி சராசரியாக 2.7 பில்லியன் டொலரைத் தங்களது சொத்து மதிப்பில் சேர்த்துள்ளனர்.

இவர்களின் சொத்து மதிப்பு மொத்தமாக 2017ஆம் ஆண்டில் 23 சதவிகிதம் உயர்ந்துள்ளது. அதிக சொத்து சேர்த்த பணக்காரராக அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் உள்ளார்.

இவர் 2017ஆம் ஆண்டில் மொத்தம் 34.2 பில்லியன் டொலர் சேர்த்துள்ளார். இவர் அக்டோபர் மாதத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸைப் பின்னுக்குத் தள்ளி உலகின் மிகப்பெரிய பணக்காரராக உருவெடுத்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

62 வயதான பில் கேட்ஸ் 2013ஆம் ஆண்டின் மே மாதம் முதலே உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் நீடித்து வந்தார்.

இவரது பெரும்பாலான சொத்துகள் தொண்டு நிறுவனத்துக்குத் தானமளிக்கப்பட்டுள்ளன. தற்போது 99.6 பில்லியன் டொலர் சொத்து மதிப்பு கொண்ட ஜெஃப் பெசோஸ், 91.3 பில்லியன் டொலர் சொத்து மதிப்பு கொண்டுள்ள பில் கேட்ஸை விஞ்சியுள்ளார்.

ஒட்டுமொத்த 500 பணக்காரர்களின் சொத்து மதிப்பு டிசம்பர் 26 பங்குச் சந்தை முடிவில் 5.3 லட்சம் கோடி டொலராக உயர்ந்துள்ளது.

2016 டிசம்பர் 27ல் இவர்களது சொத்து மதிப்பு 4.4 லட்சம் கோடி டொலராக மட்டுமே இருந்தது.

புளூம்பெர்க்கின் இந்தச் சொத்து மதிப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 49 நாடுகளில் அதிகபட்சமாகச் சீனாவின் 38 பணக்காரர்கள் இணைந்து 2017ஆம் ஆண்டில் மொத்தம் 177 பில்லியன் டொலர் சொத்து சேர்த்துள்ளனர்.

அதிகபட்சமாகச் சீனாவின் எவர்கிராண்டே குழுமத்தின் நிறுவனரான ஹூ க யான் 25.9 பில்லியன் டொலரைச் சேர்த்துள்ளார்.

பட்டியலில் அதிக பணக்காரர்கள் இடம்பெற்றுள்ள நாடாக அமெரிக்கா உள்ளது. இந்நாட்டின் 159 பணக்காரர்கள் இணைந்து மொத்தம் 315 பில்லியன் டொலரைச் சேர்த்துள்ளனர்.

இவர்களின் மொத்த சொத்து மதிப்பு 18 சதவிகிதம் உயர்ந்து தற்போது 2 லட்சம் கோடி டொலராக இருக்கிறது.

2017ஆம் ஆண்டில் மொத்தம் 29 பில்லியன் டொலர் சொத்து சேர்த்துள்ள ரஷ்யாவின் 27 பணக்காரர்கள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

பேஸ்புக் நிறுவனரான மார்க் ஜூகர்பெர்க் 2017ஆம் ஆண்டில் 22.6 பில்லியன் டொலர் சொத்து சேர்த்து, சொத்து மதிப்பு உயர்வில் நான்காவது மிகப்பெரிய அமெரிக்கராக உள்ளார்.

2017ஆம் ஆண்டுக்கான புளூம்பெர்க் பட்டியலில் 67 பேர் புதிதாக இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்