உலகின் எந்த மூலைக்கு போனாலும் உன்னை விடமாட்டோம்! சவுதி இளம்பெண்களைத் தொடரும் மிரட்டல்கள்

Report Print Balamanuvelan in ஜேர்மனி

தங்கள் குடும்ப உறுப்பினர்களின் சித்திரவதைகளிலிருந்து தப்பி ஜேர்மனியில் புகலிடம் கோரியிருக்கும் சவுதி அரேபிய இளம்பெண்களுக்கு இன்னமும் மிரட்டல்கள் தொடர்வதையடுத்து, அவர்கள் அச்சத்துடனேயே வாழ்கிறார்கள்.

அவர்களில் ஒருவரான ஆயிஷாவின் கணினித்திரையில் ஒரு செய்தி பளிச்சிடுகிறது, ‘நீ எங்கே ஒளிந்திருக்கிறாய்? உலகின் எந்த மூலைக்கு போனாலும் உன்னை விடமாட்டோம், உன்னை கண்டுபிடிப்பதற்கு ஆட்களை ஏற்பாடு செய்திருக்கிறோம்’ என்கிறது அந்த செய்தி.

இதேபோல் தனக்கு வந்த செய்திகளை தொகுத்து, அவற்றை ஜேர்மன் மொழியில் மொழிபெயர்த்து, ஒரு ஃபோல்டரில் போட்டு வைத்திருக்கிறார் ஆயிஷா.

இன்னொரு செய்தி, உன்னைக் குறித்த தகவல்களை எங்களுக்கு அளிக்க ஆள் இருக்கிறது என்கிறது.

அந்த செய்தியை அனுப்பியவர், ஆயிஷாவின் குடும்பத்தில் உள்ள ஒருவர்தான். தனது முப்பது வயதுகளில் இருக்கும் ஆயிஷா, ஜேர்மனியில் ஒரு அகதியாக வாழ்கிறார். வயது வந்த பெண்களை சொந்தமாக முடிவு எடுக்க அனுமதிக்காத ஒரு குடும்பத்திலிருந்து தப்பி வந்தவர் ஆயிஷா.

கட்டாயத் திருமணம் செய்யும் ஒரு சூழல் வந்தபோது, தனது வீட்டிலிருந்து தப்பிக்க திட்டம் போட்டார் ஆயிஷா.

தனது தந்தையின் செல்போனைத் திருடிய அவர், அதன் பாஸ்வேர்டை மாற்றி, அதன் உதவியுடனேயே, பயண உரிமத்திற்கு ஏற்பாடு செய்து ஜேர்மனிக்கு விமானம் ஏறினார்.

ஜேர்மனியில் அகதிகள் மையம் ஒன்றில் தங்கவைக்கப்பட்ட ஆயிஷா, அங்கு தான் மற்ற அரபி மொழி பேசும் அகதிகளால் கண்காணிக்கப்படுவதை உணர்ந்தார்.

பின்னர் அவரைக் குறித்த தகவல்கள், அந்த அகதிகள் மூலம் ஜேர்மனியிலுள்ள சவுதி தூதரகத்திற்கும், பின்னர் சவுதியிலுள்ள தனது குடும்பத்துக்கும் செல்வதாக சந்தேகிக்கிறார் ஆயிஷா.

தொண்டு நிறுவனங்கள் சிலவற்றிற்கும் இதே சந்தேகம் இருக்கிறது. அதன் அடிப்படையில் சில பத்திரிகைகள் பெர்லினிலுள்ள சவுதி அரேபிய தூதரகத்தை தொடர்பு கொண்டபோது, அவர்கள் அது குறித்து பேச மறுத்துவிட்டார்கள்.

ஜேர்மனிக்கு வந்தும் நிம்மதியில்லாமல், எப்போதும் கண்காணிக்கப்படும் உணர்வுடன் வாழும் ஆயிஷா, தற்போது வேறொரு இடத்திற்கு இடம்பெயர்ந்து, தலைமறைவாக, அச்சத்துடனேயே வாழ்கிறார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers