பெர்லினில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் உறவினர்கள் போராட்டம்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

தங்கள் உறவினர்களை மீட்டு நாட்டுக்கு கொண்டு வருமாறு சிரியாவில் சிறையில் இருக்கும் ஜேர்மனியைச் சேர்ந்தவர்களான ஐ.எஸ் தீவிரவாதிகளின் பெற்றோரும் உறவினரும் வெளியுறவு அமைச்சகத்திற்கு முன் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் சிலர், குழந்தைகள் பொறுப்பல்ல என்று எழுதப்பட்ட பதாகைகளையும் வேறு சிலர் கள்ளங்கபடற்ற ஜேர்மன் குழந்தைகள் இறக்கும்போது நாடு அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என்று எழுதப்பட்ட பதாகைகளையும் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எனது பேரக்குழந்தைகள் சிரியாவை விட்டு Hamburg வந்து சாதாரண வாழ்வு வாழ வேண்டும், பள்ளிக்கு செல்ல வேண்டும், பாதுகாப்பாக வாழ வேண்டும், நான் அவர்களைக் கட்டியணைத்துக் கொள்ள வேண்டும், உணவு ஊட்ட வேண்டும், அவர்கள் மீது அன்பு காட்ட வேண்டும் என்று கூறும் Intessar Aataba (51)வின் இரண்டு பேரக் குழந்தைகள் சிரியாவிலிருக்கிறார்கள்.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இன்னொருவரான Shawani (55) என்பவரின் மூன்று பேரப்பிள்ளைகள் சிரியாவிலிருக்கும் நிலையில், ஏன் பேரப்பிள்ளைகள் மீது குற்றம் சாட்ட வேண்டும், அவர்கள் என்ன தவறு செய்தார்கள் என்று எனக்குப் புரியவில்லை என்கிறார் அவர்.

உள்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, குறைந்தது 59 ஜேர்மன் ஜிகாதிகளின் குழந்தைகள் இன்னமும் சிரியாவிலிருக்கிறார்கள்.

ஜேர்மனி ஏப்ரல் துவக்கத்திலிருந்தே சிறையிலிருக்கும் ஜிகாதிகளின் பிள்ளைகள் பலரை ஈராக்கிலிருந்து அழைத்துக் கொண்டு வரத் தொடங்கி விட்டது.

வடக்கு சிரியாவில் சிறை வைக்கப்பட்டிருக்கும் ஜேர்மானியர்கள் குறித்து அறிந்திருந்தாலும், டமாஸ்கஸிலுள்ள தூதரகம் மூடப்பட்டுவிட்டதால் நேரடி தூதரக தொடர்பு எதுவும் இல்லை என்று ஜேர்மன் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

இருந்தாலும் ஜேர்மன் நாட்டவர்களை மீட்டுக் கொண்டு வருவதற்கான மாற்று வழிகளை அரசு ஆலோசித்து வருகிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்