ஜேர்மனில் மனைவி மற்றும் 3 குழந்தைகளை கொலை செய்த தந்தை

Report Print Vijay Amburore in ஜேர்மனி

ஜேர்மனில் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை குத்தி கொலை செய்த தந்தைக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஜெர்மனை சேர்ந்த ஜார்ஜ் (31) என்கிற தன்னுடைய கணவர், குழந்தைகளை அடித்து துன்புறுத்துவதாக அவருடைய 29 வயதான மனைவி ஒலிசிஜா பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

அதனை கேட்டறிந்த பொலிஸார், ஒலிசிஜா, மூன்று குழந்தைகள் மைக்கெல் (9), டிமா (7) மற்றும் மூன்று வயது மகள் அனஸ்தேசியா ஆகியோரை சந்திக்க கூடாது என ஜார்ஜ்க்கு தடை விதித்துள்ளனர்.

அவர்கள் வசிக்கும் வீடு மற்றும் அந்த பகுதிக்கே செல்ல கூடாது என கூறியதோடு, அவரிடம் இருந்த வீட்டு சாவியையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இதற்கிடையில் ஒலிசிஜா தன்னுடைய பாதுகாப்பிற்காக சகோதரனை தன்னுடன் வீட்டில் தங்குமாறு கூறியுள்ளார்.

ஆனால் சாமர்த்தியமாக செயல்பட்ட ஜார்ஜ், கேபிள் பணம் வாங்க வந்தவரை போல போன் செய்து ஒலிசிஜாவின் சகோதரனை வீட்டின் கீழ் பகுதிக்கு வரவழைத்துள்ளார்.

அவரும் அந்த இடத்திற்கு சென்றிருந்த போது, தான் வைத்திருந்த மற்றொரு போலி சாவியை கொண்டு வீட்டிற்குள் ஜார்ஜ் நுழைந்துள்ளான். உள்ளே சென்றதும் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு தன்னுடைய சொந்த குடும்பத்தையே குத்தி கொலை செய்துள்ளான்.

அவர்களுடைய அலறல் சத்தம் கேட்டு வேகமாக ஒலிசிஜாவின் சகோதரன் மேல்தளத்திற்கு ஓடி வந்துள்ளார். அவரை பார்த்ததும் ரத்தக்கறைகளுடன் நின்று கொண்டிருந்த ஜார்ஜ், அப்படியே மூன்றாவது தளத்திலிருந்து வெளியில் குதித்து தப்ப முயன்றுள்ளான்.

தரையில் வேகமாக விழுந்ததில் அவனுடைய இடுப்பு பகுதி பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான்.

அங்கு சிகிச்சை முடிந்ததும் அவனை கைது செய்த பொலிஸார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது வழக்கினை கேட்டறிந்த நீதிபதி, சிறையில் இருந்து வெளியில் வர முடியாத அளவிற்கு குற்றவாளிக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்