ஜேர்மன் மக்களுக்கு தொலைக்காட்சியில் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை பகிர்ந்துகொண்ட ஜேர்மன் சேன்ஸலரான ஏஞ்சலா மெர்க்கல், 2021இல் கடினமான நேரங்களை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.
இந்த நாட்கள் நம் நாட்டின் கடினமான நாட்கள் என்று கூறிய மெர்க்கல், அவை இன்னும் சில காலம் நீடிக்க இருக்கின்றன என்றார். குளிர்காலம் இன்னமும் கடினமாக இருக்கும் என்றும் கூறியுள்ள மெர்க்கல், கொள்ளைநோய் உருவாக்கிய சவால்கள் அப்படியேதான் இருக்கின்றன என்றார்.
கொரோனா பரவலைத் தடுப்பதற்காக அதிகாரிகள் விதித்த கட்டுப்பாடுகளை பின்பற்றிய பெரும்பான்மை ஜேர்மானியர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
அதே நேரத்தில், கொரோனாவை நம்பாமல் தெருக்களில் இறங்கி கட்டுப்பாடுகளுக்கு எதிராக போரடியவர்களை கடினமான வார்த்தைகளால் கடிந்த்கொண்டார் அவர்.
சிலர் கொரோனா வைரஸ் இருப்பதை ஒப்புக்கொள்ளாமல் மறுக்கும் அதே நேரத்தில், அதே கொரோனா வைரஸால் தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்தவர்கள் மற்றும் இன்னமும் கொரோனா தொற்றால் அவதியுற்றுக்கொண்டிருப்பவர்களின் மனக்கசப்பை தன்னால் உணரமுடிகிறது என்றார் அவர்.
கொரோனா வைரஸ் இருப்பதை ஒப்புக்கொள்ளாத சிலர் கூறும் முரண் கோட்பாடுகள் பொய்யானவை மட்டுமல்ல, அவை பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிரானவையும் கூட என்றார் அவர்.